சித்தனின் அடையாளம் கூறல்
ஒருவனடா கோடியிலே ஒருவனுண்டு உலகத்தோ டொற்றுமன தறிவாய்நிற்பான் சிறுவனடா வறுமையிலே சென்றேநிற்பான் சித்து மிகுத் துடையவன்றோ னவனேயாகுங் குருமொழியை மறவா தான் குருவேயாகும் குண்டலியி னந்தியொலி கூறுவான் பார் திருவிருந்தப் பதியறிந்து வாலைபூஜை செவ்வையாய்ச் செய்தவனே சித்தனாமே
சித்தனென்று கோடியிலே ஒருவன் உண்டு தன் பேருக்கு பின்னாலும் முன்னாலும் சித்தன் என்று பட்டயப்பெயர் தரித்து கொண்டு நடக்கிறவனெல்லாம் சித்தனல்ல
அவன் உலகத்தாரோடு ஒத்து இணைந்து தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் இருப்பான்
தவத்தின் பயனால் உருவான ஞானத்தின் அறிவால் மனத்தின் சாட்சியோடு மக்களுக்காக வாழுவான் பாடுபடும் உயிர்களுக்காக அவர்கள் நன்மைக்காக தன் வாழ்வை செலவழிப்பான்
அவன் தன்னை எப்போதும் நான் பெரிய சித்தனென்று சொல்லமாட்டான் தானென்ற அகந்தை அற்று நிற்பான்
தன்னை எதுவும் அறியா சிறுவன் என்றே சொல்லிக்கொள்வான்
வறுமையையே விரும்பி ஏற்றிருப்பான் ஆடம்பரங்களில் நாட்டம் வைக்கமாட்டான்
அவன் அட்டமா சித்து வேலைகளை அத்தனையும் நிகழ்த்திடுவான்
குருவின்மேல் மிகுந்த பற்று கொண்டு குருமொழியே வேதவாக்கென ஏற்று நல்வழியே நடந்திடுவான்
குண்டலினியினை ஏற்றிய அடையாளமாக நந்தியின் குருவான ஆடல்வல்லோனின் சிலம்பொலி நாதம் கேட்டிருப்பான் இறையின் நல்லருள் பெற்று
ஆதி பரம்பொருளோடு இரண்டறக்கலந்து வெளியிலே வாலையன்னைக்கு சிலை வைத்து மூடர்போல் புறத்தில் தேடாமல்
தவத்தின் மேன்மையான நிலையாகிய மனோன்மணி தாயை மனத்திலே நிறுத்தி வாலை உறையும் இடத்தை தவத்தினால் கண்டுணர்ந்து வாலை பூஜை செய்து சித்தனாக வாழ்வான்
ஆதிமூலமான பரம்பொருள் பாதம் போற்றி.











