விண்ணூரும் விடையான்என்
எண்ணூரும் இறையோன்முக்
கண்ணாரும் கடவுள்நற்
பண்ணாரும் பதியானே
பதியாவான் பத்தர்க்குக்
கதியாவான் கருணைபாய்
நதியாவான் நல்லோர்வாய்த்
துதியாவான் தூயவனே
தூயவனாம் தொழுவோர்க்குத்
தாயவனாம் சாருமுளம்
மேயவனாம் மறையறியா
மாயவனாம் வரையோனே
வரைதனை அசைத்தோனைத்
தரைமிசை அடர்த்தோனோர்
நரைவிடை நயந்தோன்பூ
விரைகமழ் கழலோனே
கழலடி துணையென்று
விழுபவர் துயர்தீர்ப்போன்
அழலொரு விழிகொண்ட
பழையதொர் பரமாமே
பரந்ததொர் சடையான்நல்
உரந்திகழ் விடையான்மான்
கரந்தனில் உடையான்இல்
இரந்துணும் இறையாமே
இறைஞ்சிடும் அடியார்க்குக்
குறைந்திடா தருள்வோன்உள்
மறைந்தென துணர்வாக
நிறைந்துள குருநாதன்
நாதமே உருவானோன்
வேதமுட் கருவானோன்
காதலோ டவன்நாமம்
ஓதுவோர் வினைதீர்ப்பான்
தீர்த்தமும் மதிபாதி
சேர்த்தமா முடியோன்ஓர்
வார்த்தையும் உரையாத
மூர்த்தியாம் குருவாவான்
ஆவினைந் துகந்தேற்பான்
காவென அடியார்கள்
கூவிடின் வருவானென்
பாவினுள் உறைவோனே.
ஓம் நமசிவாய










