அதிக புண்ணியம் பெறலாம் தெரியுமா ?
“கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்” என “மஹாபாரதத்தில்” வரும் கொடை வள்ளல் “கர்ணனின்” கொடை குணத்தை சிறப்பித்து கூறுவார்கள். இறைவனின் அருளால் இந்த உலகில் உள்ள சிலர் பெருமளவு பொருட்ச்செல்வதை பெற்றாலும் அனைவருக்குமே அதை பிறருடன் பகிர்ந்து கொள்ள மனம் வருவதில்லை.
தனக்கு உரியதான எதையும் பிறருக்கு கொடுப்பதை தான, தர்ம காரியங்களாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
மிகவும் புண்ணியம் தரக்கூடிய இந்த தான தர்ம காரியங்களை செய்யும் முறைகள் சிலவற்றை இங்கு காண்போம்.
தான, தர்ம காரியங்களைச் செய்வதற்கென்று சில நெறி முறைகள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றும் போது நமக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும்.
முதலில் “தானத்திற்கும்”, “தர்மத்திற்கும்” உள்ள வேறுபாடை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிலும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு நாம் மனமுவந்து அளிக்கும் எதுவும் “தானம்” எனப்படும்.
அதுபோல நம்மை விட எல்லா விஷயத்திலும் குறைந்த நிலையிலிருப்பவர்களுக்கு நாம் மனதார அளிக்கும் எதுவும் “தர்மம்”எனப்படும்.
இத்தகைய தான தர்ம காரியங்களை செய்வதற்கு பொதுவாக பகல்-இரவு, நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லையென்றாலும், தங்களின் ஒரு மனஎண்ணம் நிறைவேற எண்ணி கொடுக்கப்படும் தான தர்மங்களை பகல் நேரத்திலேயே செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில் பகல் பொழுதில், அனைத்திற்கும் காரகனாகிய சூரிய பகவான் நாம் செய்யும் தான தர்ம காரியங்களுக்கு சாட்சியாக இருப்பதால் நமக்கு அக்காரியங்களால் புண்ணிய பலன்கள் ஏற்படுவதை அவர் உறுதி செய்கிறார்.
மேலும் சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப் பிறப்பு, வெளியூர் கிளம்பும் காலம், ஆபத்து காலங்கள், குழந்தை பிறப்பு, இதிகாச மற்றும் இறைவனின் கதா காலட்சேபங்கள் போன்ற நிகழ்வுகளின் போது தான தர்ம காரியங்களை இரவு நேரத்திலும் செய்யலாம்.
இதனால் நமக்கு சேர வேண்டிய புண்ணிய பலன்களில் குறைவேதும் ஏற்படாது










