நிறைப் புத்தரிசி !
நேத்து நாஞ்சி நாட்டுக் கோயில்ல,,,நிறை !
நிறைன்னா ?
அதான்,,, நிறைப் புத்தரிசி,,,,வே,,, !
அப்படின்னா,,,?
அன்னிக்கெல்லாம்,,,
வயலும், வயல் சார்ந்த வேலைகளுமா ? இருந்த மக்க கூட்டமொன்னு இருந்தது,,இந்த நாட்டுல,,,,
அவுகளுக்கு கொண்டாடுகதுக்கு ஒரு நாள் வேணுமில்லா,,,, ?
அதான்,.
நிறைப் புத்தரிசி,,, !
சித்திரைப் பத்தாம் நாள் பொடிப் பட்டத்துல வெதக்க ஆரம்பிச்சி,,,,
நாலாங்கொம்பு,,அஞ்சாங்கொம்புன்னு வெதச்ச நெல்லு மொளைக்கிற அளவுக்கு லேசா,,,கோடை மழை பெஞ்சிட்டுப் போகும்,, சமயத்துல அடிச்சிப் பெய்யுற மழையுமுண்டு,,,,
பங்குனி சித்திரை வெயில்ல காய்ஞ்சு கிடந்த மண்ணு,,,
தூசும், தும்புமா,,, வெக்கையை ஏத்துக்கிட்டு கிடந்த மண்ணுல,,, விதைச்ச விதையும்,,, பெய்ஞ்ச மழையும்,,, ஒன்னுக்குள்ள ஒன்னாக் கிடந்து,,, விரவி நிரவி,,கலந்து காதலாகிக் கசிந்து பொழிஞ்ச பசுமையாய்த் தழைச்ச பயிர் சித்திரை, வைகாசி, ஆனி, மாசமெல்லாங் கடந்து ஆடிக் கடைசியில,,,, கல்யாணமாகிச் சூலுண்ட பொண்ணு போல தளதளன்னு நிக்கையில,,,,
அட ! நூறு, நூத்திப் பத்து நாள் கடந்து,,, வாயைக் கட்டி வயித்தக் கட்டி வளத்த பயிரை அறுத்து, தலச்சுமையா களத்துக்கு கொண்டு வந்து மாடு கட்டி சூடடிச்சு,
சூடடிக் கொத்துக்கு அளந்து,
குளக் காவலுக்கு அளந்து,
வாங்கின கடனுக்கு அளந்து , மிச்சமிருக்கிற கொஞ்ச நெல்லை, வீட்டுக் குதிலுக்குக் கொண்டு வருகதுக்கு முன்னால,,,,
விவசாயி அவன் படுக பாடு இருக்கே,,,?
அதெல்லாம்,,,பெரும்பாடு !
விவசாயி அவம் பாடும், அந்த செவம்[சிவம்] பாடும் ஒன்னு தான் !
அப்படி விவசாயி அவன் வயலறுத்து நெல்லை வீட்டுக்கு கொண்டு வருகதுக்கு முன்னால,,,,
ஆவணி பொறக்கிறதுக்கு முன்னால,,,
ஆடிக் கடைசியில,,,
ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பாத்து,,, வெளஞ்சு கிடக்கிற வயலுக்கு போய் கன்னி மூலையில,,, தும்பு இலை விரிச்சு, வெத்தல பாக்கும், பழமும், வச்சு, ஒரு தேங்காயும், உடைச்சு சூடங்காட்டி நிலத்தைக் கும்பிட்டு,,,
கும்பிட்ட படியே,,, விளைஞ்ச கதிர்ல,,, ஒரு ஏழு கதிரை அறுத்தெடுத்து அதையும், ஆணுன்னா தலைச் சுமையிலும், பொண்ணுன்னா ஒக்கலிலும், சுமந்து கொண்டு
வயலில் இருந்து வீட்டு வாசலுக்கு வந்து,, நின்னு,,,
வாசப்படியைத் தொட்டுக் கும்பிட்டு, ,,,,
அரங்கு வீட்டுக்குள்ள இருக்கிற சாமிபடங்களுக்கு முன்னுக்கு,
ஏத்தி வச்ச திருவிளக்குக்கு முன்னால வச்சு,,,
அம்மா ! தாயே ! அன்னபூரணீ
இன்னிக்கு,,வெளைஞ்ச கதிரைக் கொண்டு வந்திருக்கேன் ! தாயீ,,,
நிறைஞ்ச மனசோட,,,இந்த கதிர் எங்க வாழ்க்கையை நிறைக்கட்டும்ன்னு சொல்லிக் கீழே விழுந்து கும்பிட்டு,,,,
அதுல,,, நாலு கதிரு நெல்லெடுத்து உதிர்த்து அரிசியெடுத்து களைஞ்சு வச்சுருக்கிற அரிசிக்க கூட கலந்து உலையில் இட்டு பொங்கி,,
நாக்கு ருசியா,,
ஒரு நா நாலு கறி வச்சு, பருப்பும், பப்படமும், பாயசமும், வச்சு தலை வாழை இலை போட்டு, வழிச்சு வழிச்சுத் திங்கயில,,,
இத்தன நாள் அவம் பட்ட கஷ்டமெல்லாம்,
அந்த ஷண நேரம் அத மறக்கான் பாருங்க,,, !
அதுக்குத்தான் ! இவ்வளவும்,,,
வயலில் அறுத்துட்டு வந்த ஏழு கதிரில் ரெண்டு கதிர் நெல்லெடுத்து அதையும், குஞ்சலமாக் கட்டி வாசல் நடையில கட்டித் தொங்கவிட்டு,,, அப்பப்ப பறக்கிற குருவிக்கும் உணவாக இருக்கட்டுமுன்னு செய்யுறான் பாரு,,, அவந்தான் விவசாயீ,,,
சொந்தமா நிலம் இருக்கிறவன் இதெல்லாம் செய்வான் !
ஆனா,,,
ஒன்னுமில்லாதவன் என்னத்த செய்ய ?
அதான்,,, !
நாஞ்சி நாட்டுல இருக்கிற ஒவ்வொரு ஊர்க் கோயில்லயும், நிறைப் புத்தரிசின்னு ஒரு நாள் விழா, நடக்கும்,,,!
அன்னிக்கு,,,
ஊர்க் கோயிலுக்குச் சொந்தமான வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்தெடுத்துட்டு வந்து ஊர் கோவிலில் சாமிக்குப் படைச்சு,, அன்னிக்கு கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கெல்லாம், ஆளுக்கு ரெண்டு கதிர் கொடுக்க,,,
அவர்களும்,,வாங்கிய நெற்கதிரை வீட்டுக்கு கொண்டு சென்று,,, ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிற அரிசியுடன்,,, கொண்டு சென்ற நெற்கதிர் உதிர்த்தெடுத்த அரிசியினையும், சேர்த்து புத்தரிசியென சமைத்து உண்பது,,,,, என்பது வேளாண் பெருமக்களுக்கொரு மங்கல நாளென்று கொண்டாடியதன் மிச்சம்,,,, தான்,,,,,
இன்றைய நிறைப் புத்தரிசி,,,, !











