69 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்துடன் இணைந்து வரும் பங்குனி உத்திரம்
69 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்துடன் இணைந்து வரும் பங்குனி உத்திரம்…எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?
பங்குனி மாத பெளர்ணமியை பங்குனி உத்திர பெருவிழாவாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தெய்வ திருமணங்கள் பலவும் நடந்த நாள் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண வைபவங்கள் போன்றவை நடைபெறுவதுண்டு. பக்தர்கள் பலர் விரதமிருந்து, காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவது வழக்கம். இது திருமண வரம் தரும் விரத நாள் என்பதால் ஏராளமான கன்னிப் பெண்களும், இளைஞர்களும் இந்த நாளில் விரதம் இருப்பார்கள்.
சந்திர கிரகணத்தில் பங்குனி உத்திரம் :
2024ம் ஆண்டில் பங்குனி உத்திரம், மார்ச் 25ம் தேதி வருகிறது. அந்த நாளில் தான் 2024ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. கிட்டதட்ட 69 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திரமும் சந்திர கிரகணமும் ஒரே நாளில் இணைந்து வருகிறது.
மார்ச் 25ம் தேதி காலை 10.23 முதல் பகல் 03.02 வரை கிரகணம் நிகழ உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கிரகண நேரம் என்பது கெட்ட நேரமாக கருதப்படுவதால், இந்த நேரத்தில் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
கோவில்களும் இந்த நேரத்தில் மூடப்பட்டிருக்கும். இதனால் இந்த நாளில் எந்த நேரத்தில் விரதம் இருக்க வேண்டும், எந்த நேரத்தில் வழிபட வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.
பங்குனி உத்திர வழிபாட்டை எந்த நேரத்தில் செய்யலாம்?
பங்குனி உத்திரம், திங்கட்கிழமையன்று வருகிறது. அன்றைய தினம் காலை 07.30 முதல் 9 வரையிலான நேரம் ராகு காலம் ஆகும். 10.30 முதல் 12 வரையிலான நேரம் எமகண்ட நேரமாகும். இதனால் பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் காலை 07.15 மணிக்கு முன்பாக வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் முடியாதவர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு வழிபாட்டை துவங்கி, 10 மணிக்கு வழிபாட்டை நிறைவு செய்த கொள்ள வேண்டும்.
அதற்கு பிறகு உணவு ஏதும் சாப்பிடாமல் நாள் முழுவதும் கிரகணம் உள்ளதால், அந்த நேரத்தில் விரதமாக இருக்க வேண்டும். மாலை 03.30 மணிக்கு பிறகு கிரகண கால முடிந்ததும் கோவில்களில் சாந்தி பூஜை முடிந்து, அபிஷேகங்கள் நடைபெறும்.
அந்த சமயத்தில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். காலையில் பங்குனி உத்திர பூஜையை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு, இரவு 8 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி முருகனை நினைத்து வழிபடலாம். அதற்கு பிறகு பங்குனி உத்திர விரதத்தை நிறைவு செய்யலாம்.











