எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?–
நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம்
நவீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில். இப்போது,
லாடம் கட்டுவது என்பது பெரும்பாலும் போலீஸ் ட்ரீட்மென்ட் பாஷையாக மட்டுமே இருக்கிறது!
மனிதனுக்காக மாடாய் உழைப்பவை காளை மாடுகள். கால்களைக் கட்டிப்போட்டு காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவதைப் பார்க்கும்போது அவைகளை ஏதோ சித்திரவதைக்கு உள்ளாக்குவது போல் தெரியும்.
ஆனால், மாட்டுக்கு லாடம் கட்டுவது ஜீவகாருண்யத்தை போற்றும் செயல் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.
லாடம் இல்லாவிட்டால் அபராதம்
கல்லிலும், முள்ளிலும் பாரம் ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு அதன் கால்கள் தேய்ந்துவிடாமலும் கால்களில் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடமாலும் இருக்க இரும்பால் தயாரிக்கப்பட்ட லாடம் பொருத்தப்படுகிறது.
புரியும்படியாக சொல்வதானால், மாடுகளுக்கு நம்மைப் போல செருப்பு, ஷூ அணிந்து நடக்கத் தெரியாது. அதற்காக அவற்றின் கால்களில் நிரந்தரமாக ஒரு காலணியை பொருத்திவிடுவதையே லாடம் கட்டுதல் என்கிறோம்.
மாட்டு வண்டிகள் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்த அந்தக் காலத்தில், போலீஸார் அவ்வப்போது மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகளை சோதிப் பார்கள்.
அப்போது, மாடுகளின் கால்களில் லாடம் இல்லை என்று சொன்னால் அபராதம் விதித்து விடுவார்கள். இதுபோல், மாடுகளை விரட்ட வண்டிக்காரர் கையில் தார்க்குச்சி வைத்திருந்தாலும் தண்டம் கட்டியாக வேண்டும்.
வாரம் ஒரு கிராமத்தில்..
இப்படியொரு சிஸ்டம் இருந்ததால் அப்போதெல்லாம் லாடம் கட்டிகளுக்கு ஏக கிராக்கியாக இருக்கும். கருக்கலில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்தால் தான் உண்டு. அப்போது, லாடம் கட்டும் தொழிலைச் செய்பவர்கள் வாரம் ஒரு கிராமத்தில் கேம்ப் அடிப்பார்கள்.
அன்று முழுவதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை காளைகளுக்கும் லாடம் கட்டிவிட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள். இதனால், லாடம் கட்டும் இடமே திருவிழாக் கூட்டமாய் இருக்கும்.
அந்தளவுக்கு அன்றைக்கு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மாடுகளும் மாட்டு வண்டிகளும் இருந்தன. ஆனால், இப்போது..? டாடா ஏஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வருகை மாட்டு வண்டிகளை ஓரங்கட்டி விட்டன.
இதனால் காளைமாடுகளின் தேவையும் வெகுவாகக் குறைந்து போனது. அதனால், கிராமங்களில் லாடம் கட்டுவதையும், லாடம் கட்டிகளையும் பார்ப்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது.











