உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரே
இப்பாடல் இறைவனின் தன்மைகளைப் பட்டியலிடுகிறது. அவன் ஒரு உருவத்தைக் கொண்டவனல்ல, உருவமற்ற வெளியுமல்ல. அதாவது இதுதான் என்று கூறமுடியாத உருவத்தை உடையவன்.
இறைவன் அனைத்தையும் தாங்குபவனாக ஆனால் தனக்கு ஒரு ஆதாரமும் இல்லாதவனாக உள்ளான். இதை நிராலம்பம் என்பர். அவர் எதுவாகவும் மாறுவதில்லை, தன்னிலையில் மாற்றமடைவதில்லை, தான் எதன் மாற்றத்தின் விளைவாகவும் இருப்பதில்லை.
அவனை அளக்க முடியாது. இதுதான் இறைவன் இது அல்ல என்று கூறமுடியாது. அனைத்தும் இறைவனே. அவன் எல்லா குணங்களையும் கொண்டவனாகவும் இந்த குணம்தான் அவன் என்று சுட்டிக்காட்ட முடியாதவனாகவும் இருக்கிறான். இதைத்தான் நிர்குணம் என்று எல்லா பாடல்களும் குறிப்பிடுகின்றன.
அவன் மிகப்பெரியவனாகவும் மிகச் சிறியவனாகவும் உள்ளான் அவன் ஜீவனல்ல ஆனால் ஜீவனைத் தன்னுள் கொண்டவன்.
இத்தகைய பெருமை வாய்ந்த இறைவனை யாராலும் பார்க்க இயலுமா என்று சிவவாக்கியர் வியக்கிறார்.











