மனிதனால் இயற்கையாக எதுவுமில்லாமல் ஒன்றையும் படைக்க முடியாது.
ஒரு புல்லை கூட உருவாக்க முடியாது.
ஒரு துகளை கூட உருவாக்க முடியாது.
ஒரு முடியை கூட உருவாக்க முடியாது.
ஒரு துளி நீரைக் கூட
உருவாக்க முடியாது.
ஒருதுளி இரத்தத்தை கூட உருவாக்க முடியாது.
ஒரு கண நேரத்தை கூட ஆயுட்காலத்தில் நீட்டிக்க முடியாது.
புல் தானாக வளர்கிறது.
நீர் தானாக உருவாகிறது.
காற்று தானாக உருவாகிறது.
முடி தானாக உருவாகிறது.
இரத்தம் தானாக உருவாகிறது.
எல்லாம் தானாய் நிகழ்கிறது.
பூமி சுழல, சந்திரன் சுழல, சூரியன் சுழல…
இயக்கத்தினால் காலம் உண்டாகிறது.
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி முடிக்க நாள் உண்டாகிறது.
நிலா பூமியை சுற்றி முடிக்க மாதம் உண்டாகிறது.
பூமி சூரியனை சுற்றி முடிக்க வருடம் உண்டாகிறது.
சதா இயங்கிக் கொண்டே இருக்கும் நிலவையும், பூமியையும், சூரியனையும் யார் இயக்குவது…
உடலை அதன் உறுப்புகளை அதே சக்தி தான் இயக்குகிறது.
எல்லா கோள்களையும், உயிர்களையும் அது தானே இயக்குகிறது.
கருப்பைக்குள்ளேயே ஒரு உயிர் அனைத்து உறுப்புகளுடன் படைக்கப்பட்டுவிடுகிறதே.
யார் அதை படைப்பது…
ஒரு விதைக்குள்ளேயே ஒரு விருட்சம் உள்ளதே…
யார் அதைச் செய்தது…
ஒரு விதை தான்
வேராயிற்று.
கிளையாயிற்று.
இலையாயிற்று.
காயாயிற்று.
கனியாயிற்று.
எப்படி என்று சிந்தித்தால் விளங்கிடுமா.
படைப்பின் சூட்சுமங்கள்.
எதைக் கொண்டு நாம் சிந்திக்கிறோம்,
அறிவினால் என்றால்,
அறிவை யார் படைத்தது,
அறிவு எல்லா நேரத்திலும் அதாவது உயிர் பிரிந்த பின்னும் வேலை செய்கிறதா,
அறிவு பெரிதா,
உயிர் பெரிதா,
படைத்தவனே மிகப் பெரியவன்.
உள்ளே இருக்கிறானா…வெளியே இருக்கிறானா,
எங்கும் இருக்கிறானா…என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர்,
உள் ஏது…புறம் ஏது,
அணுக்களும் அவனே.
அண்டமும் அவனே.
ஏகப் பெருவெளியில்
ஏகனும் அவனே!
அனேகனும் அவனே!!!
அழியக் கூடிய ஒன்றிற்கே ஆரம்பமும் முடிவும் உண்டு.
உடலுக்கு ஆரம்பம் முடிவு உண்டு.
உயிருக்கு உண்டா…
ஆதி உண்டா…அந்தமும் உண்டா என்றால்
எப்பொழுதும் இருக்கிற, அழிவில்லாத ஒன்றிற்கு ஆதி அந்தம் இல்லை.
எங்கும் எப்பொழுதும் நீக்கமற நிறைந்தவனே இறைவன். அவனே அனைத்தையும் அறிவான். ஆனால் அறிவால் அவனை அறிந்திட இயலுமா…
கடலுக்கு கூட கரை உண்டு.
பூமிக்குக் கூட எல்லை உண்டு.
விண்ணிற்கு உண்டா…
இறைவனின் ஆற்றலுக்கு எல்லை உண்டா…
படைப்புகள் படைத்தவனை வணங்குவதில் வியப்பேதும் உண்டோ.











