உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. மத யானை போல வலிமையுடைய, தோற்காத திண்ணிய தோளன், நந்தகோபாலன் மருமகளே… நறுமணம் வீசும் கூந்தலினாய்… நப்பின்னையே! வாயிற் கதவைத் திற. நாற்புறத்திலும் கோழிகள் கூவுகின்றன.
குருக்கத்தி பந்தலின் மேல் குயில்கள் பலமுறை கூவி அழைக்கின்றன. பந்தாட்டத்தில் கண்ணனைத் தோற்பித்து விரல்களால் பந்தை பற்றியிருப்பவளே.. நீயும் கண்ணனும் உறவு சொல்லிப் பேசும்போது, உன்னோடு சேர்ந்து அவனை வசை பாட நாங்களும் வேண்டாமா?
அதனால் நீ அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்க நடந்து வந்து செந்தாமரை போன்ற கையாலே மகிழ்ந்து கதவைத் திறக்க வேண்டும் என்கிறார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது.
தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். அதனால்தான், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.










