கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம் பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.
ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்.











