வைகுண்ட வாசுதேவன்,குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சி,ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாகக் காட்சியளித்த அற்புத ஷேத்திரம் குணசீலம்.
இத்திருத்தலத்தில் எம்பெருமான்,ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் நின்ற திருகோலத்தில் காட்சியளிக்கிறார்.
சங்கம்,சக்கரம்,வரதஹஸ்தம்,கடிஹஸ்தத்துடன் திருமார்பில் லட்சுமியைத் தாங்கி சேவை சாதிக்கும் எம்பெருமான்,வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கிறார்.இச்செங்கோலினாலேயே மனநலக் கோளாறுகளை பெருமாள் நிவர்த்தி செய்வதாக ஐதிகம்.
மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி விரத முறைகளை மேற்கொண்டு காவேரி நதியில் நீராடி எம்பெருமானை வழிபட்டால் அவ்வினைகள் யாவும் நீங்குவதாக நம்பிக்கை.
திருப்பதி எம்பெருமானே குணசீல மகரிஷிக்குக் காட்சியளித்ததால் திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனை களைச் செலுத்த இயலாதோரும் அந்தப் பிரார்த்தனைகளை இப்பெருமானிடத்தில் செலுத்தி நிறைவு செய்து வருகின்றனர்.ஆகவே,தென் திருப்பதி என இத்திருத்தலம் போற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.
அமைவிடம் திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் காவேரி நதியின் அழகிய வடகரையில் அமைந்துள்ளது.











