அந்த நடராஜர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தின் அருகில் பிராமண குடும்பத்தில் பிறந்தார், அதனால் என்னமோ வேதங்கள் மேல்
இயல்பாக விருப்பம் வந்தது அதனை ஓரளவு கற்றவர் தந்தை வழியில் ஜோதிடம் பார்க்கும் தொழிலை கற்று செய்ய துவங்கினார்,
ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் கோவிலும், விஜயாபதி ஆலயயமும் அவரின் விருப்ப இடமானது, இளம் வயதிலே திருமணமும்
நடந்தது ஆனால் மனம் ஏதோ ஒன்றை தேடி அலைந்தது அதனை ஜோதிடத்தால் கொடுக்கமுடியவில்லை
அது ஆத்மாவின் தேடல் இளம் வயதிலே அது அவருக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது, அந்த தேடல் பல இடங்களுக்கு செல்ல
வைத்தது அப்போதுதான் அவர் வல்லநாட்டு சித்தரை கண்டார், அந்நேரம் அவருக்குள் இருந்த தேடல் நின்று போனது, தன்
ஏக்கத்துக்கு வழிகாட்டும் குரு இவர்தான் என்பதை சூரியனை காண்பது போல் கண்டுகொண்டார், அந்நொடி முதல் அவரின்
வாழ்க்கை மாறிற்று
வல்லநாடு சாதுசிதம்பர சுவாமிகளின் வழிகாட்டலில் விநாயக பெருமானின் பாதமே முக்தி அடையும் வழி என்பதை உணர்ந்து
அவரில் முழுக்க கரைய துவங்கினார், அருகம்புல் கொண்டு விநாயகர்க்கு வழிபாடு செய்வதும் அதனை பெரும் துயரில் வாழ்வில்
வாடும் மாந்தர்க்கு கொடுத்து அவர்கள் தொல்லை தீர்ப்பதுமே அவரின் பணியாயிற்று
விநாயக பெருமானின் அருளை அருகம்புல்லில் பெற்று மக்களுக்கு கொடுத்து துயர் தீர்த்ததால் அவர் அருகம்புல் சித்தர் என்றானார்
சுவாமிகளுடன் சதுரகிரியில் தவம் செய்வதும் அங்கிருக்கும் தவசிகளுடன் வழிபாடுகள் செய்வதுமே அவரின் பிரதானமாயிற்று,
சதுரகிரி என்பது சித்தர்களின் பூமி அப்படியே அங்கு இன்னொரு பெரும் அம்சம் உண்டு அது அகத்திய பெருமான்
சதுரகிரியில் யோகம் செய்வோர்க்கு அகத்தியபெருமானின் அருள் நிரம்ப கிடைக்கும், சாது சிதம்பர சுவாமிகள் இதனை நிருபித்து
அகத்திய மலைக்கெல்லாம் அடிக்கடி தன்னை நம்பும் சீடர்களோடு செல்வார், அப்படி இவரையும் அடிக்கடி அழைத்து சென்றார் அது
பாறைக்குள் வேர் போல் அகத்தியர் அருளை உள்ளே மெல்ல இறக்கிற்று
பின் தன் குருவின் உத்தரவு படி, காசி தட்சனேஸ்வரம் எனும் வங்க பகுதிகள், ஹிமாலயம் என எங்கெல்லாமோ சுற்றி திரிந்தார்,
அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது அதை செய்தவர் அகத்திய மாமுனி
காசியில் அவர் இருந்தபோது ஒரு சித்தர் அவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அகத்திய மாமுனி சொன்ன யோக
பயிற்சி முறையும் அடங்கும், அதில் பாதி பாடல்தான் இவருக்கு கிடைத்தது. மீதி பாடல் எங்கிருக்குமோ என தேடி அலைந்தவர்க்கு
வங்கத்தின் பகுதியில் மீதிபாடலும் அகத்தியர் அருளால் கிடைத்தது
அதனை “மனோன்மணி மேகலை” ஸ்ஸோத்திரம் என வெளியிட்டார், ராமானுஜரை போல் தான் பெற்ற மந்திரத்தை எல்லா மக்களும்
பெறவேண்டும் என்பதே அவரின் மனதார்ந்த எண்ணமாயிருந்தது
கிருஷ்ண்டபட்ச, சுக்லபட்ச திதிகளில் ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டிய மந்திரத்தை தமிழ்படுத்தி அவர் தந்திருக்கின்றார்,
“மனோன்மணி மேகலை” என அது இன்றும் உண்டு
அகத்தியர் வாழ்வில் அவர் தேவர்களால் துன்பபட்ட காலங்களும் உண்டு, மானிடன் ஒருவனுக்கு ஈசன் காட்டிய பெரும் கருணை
பொறுக்காமல் தேவர்கள் அவருக்கு இன்னல் இளைத்தார்கள், அந்த இன்னலில் இருந்து விடுபட ஈசனை நோக்கி அகத்தியர் பாடிய 102
பாடல்கள் உண்டு அதையும் “ஆறெழுத்தந்தாதி” என தொகுத்து பெற்று திரும்பினார் சித்தர்
தென்னகம் திரும்பியவர் சிறிது காலம் மலையாள தேசத்தின் தலங்களை தரிசித்து கொண்டிருந்தார்,அப்போது நெய்யாறு
அணைகட்டு பக்கம் பிரம்மஞானி கோபால் வைத்தியரின் ஆசிரமம் சென்றார், அவர் அங்கே பிரசித்தியான ஆன்மீகவாதி ஆனால்
உருவ வழிபாட்டினை செய்வதில்லை
அவருக்கு பல போதனைகளை சொன்ன சித்தர், உடல் எடுத்த மானுடன் இறைவனை உடல் வடிவில் வழிபடுதலே சரி உருவத்துடன்
அன்னையினை வழிபடுதலே நன்று என சொல்லி அவருக்கு ரஜராஜேஸ்வரியின் உருவத்தை வைத்து வழிபட செய்துவித்தார் அந்த
உருவம் இப்போதும் உண்டு
அங்கிருந்து தமிழகம் வந்தவர் நெல்லை, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் என பல இடங்களில் சுற்றி திரிந்தார் ஆலயங்களும்
கண்டார் தன்னை அழைத்த அடியார் வீடுகளில் தங்கி கணபதி ஹோமம் முதலாவற்றை செய்து கொடுத்தார்,பவுர்ணமி பூஜையினை
சித்தர் மரபுபடி பல இடங்களில் நடத்தி கொடுத்தார், அந்த இல்லங்களெல்லாம் பெரும் பெற்றினை அடைந்து பெருவாழ்வு வாழ
துவங்கின
பெரும் ஆன்மீகவாதியாக ஏகபட்ட மக்களுக்கு குருவுவாக விளங்கினார், சதுரகிரி திருவண்ணாமலை என புனிதமான இடங்கள் தோறும் அவரும் தவமிருந்தார், அங்கிருக்கும் சித்தர்களுடன் பெரும் தொடர்பும் அவருக்கு ஏற்பட்டது
கன்னியாகுமரியின் மாயம்மா, அதன் அருகே மருந்துவாழ் மலையில் இருந்த நயினார் சுவாமிகள், புரவிபாளையத்தின் கோடி சித்தர், தூத்துகுடி குறுக்குசாலையில் இருந்த ராஜகோபால சுவாமிகள், ரத்னகிரி முருகன் கோவிலில் இருந்த பாலமுருகனடிமை சுவாமிகள், திருவலம் மவுன குரு சாமிகளுடன் அவருக்கு பரிட்சயம் இருந்தது
சாது சிதம்பர சுவாமிகளை போலவே இன்னொரு சுவாமிகளிடமும் மனதை அவர் முழுக்க கொடுத்திருந்தார் அவரை பகவானின் அவதாரமாகவே கருதினார் அது தெய்வகுழந்தை என கொண்டாடபடும் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள்
யோகிராம் தன் அன்புகுரிய சீடர்களில் ஒருவராக இவரை நோக்கினார், அடிக்கடி அவரை தரிசிக்கும் பாக்யமும் இவருக்கு வந்தது, இனம் தன் இனத்தை எளிதில் அடையாளம் காணும், நீரோடு நீர் எளிதில் கலந்துவிடும்
சதுரகிரி திருவில்லிபுத்தூர் போன்றவை அவருக்கு மிக பிடித்தமான இடங்கள், திருவில்லிபுத்துரில் மரணித்தால் முக்தி என அவர் சொல்லுமளவு அந்த ஊரும் ஆலயமும் அவரை ஈர்த்து கொண்டன
ஆனாலும் அதையெல்லாம் தாண்டி கன்னியாகுமரி பக்கம் மகாதனபுரம் எனும் ஊரில் 1987 ஜூலையில் வந்து சேர்ந்து தன் அந்திமகாலம் நெருங்குவதை உணர்ந்தார்,அந்நேரம் அவரின் ஆத்ம ஒளி பெரிதாக கூடியிருந்தது , சக்தி பெருகியிருந்தது
அவர் விநாயக பெருமானை வணங்கி கொடுக்கும் அருகம்புல்லின் மகிமை பிரசித்தி பெற்றது அது ராமனின் ஒரே அம்பு ஏழு மரங்களை துளைத்தது போல் ஏழுபிறப்பு வினைக்கும் எல்லாவகை துன்பத்துக்கும் மருந்தாக அமைந்தது
பெரும் பக்தர் கூட்டம் அவருக்கு பெருகிற்று, அவரும் மாபெரும் அருள் நிலையிலிருந்தார், பெரிய போதனைகளை ஞானத்தின் நிறைவில் பெரிதாக மொழிந்தார், அணையபோகும் விளக்கு பிரகாசம் அடைவதுபோல் அவரின் முகமும் உடலும் தேஜசுடன் விளங்கிற்று
ஆலய தரிசனம் பல முடிந்தபின் மீண்டும் திருவில்லிபுத்தூர் சென்றவர் அங்கே ஆகஸ்ட் 17, 1987ல் சித்தி அடைந்தார், அவர் விரும்பியபடியே அவர் அங்கே சமாதியாகி முக்தியும் அடைந்தார்
அப்போது ஒரு நம்பமுடியா ஆச்சரியமும் நடந்தது, இங்கே அவர் சமாதி செய்யபட்டு பக்தர்களெல்லாம் கலங்கி நின்ற நேரம் அவரோ மும்பையில் தன் அன்பர் ஷேஷாத்திரி என்பவருடன் அளாவளவி கொண்டிருந்தார், 10 நாட்கள் மும்பையில் எல்லோருக்கும் பிரசாதமும் இன்னும் பலவும் வழங்கி கொண்டிருந்தார்
அக்காலம் இப்போது போல் தகவல் தொடர்பு இல்லாதவை, சித்தர் முக்தியான செய்தி 10 நாட்கள் கழித்தே அவரின் சீடர்களில் ஒருவரான ஷேஷாத்திரியினை எட்டிற்று, அவரோ 10 நாட்களுக்கு முன்பு சித்தியான சுவாமி தன்னோடு இந்த நொடிவரை இருப்பதை அறிந்து அவர் இருந்த அறையினை திறந்து பார்த்தால் சுவாமி அங்கு இல்லை
தான் எவ்வளவு பெரிய மகான் என்பதை இப்படி தன் பக்தர்களுக்கு பல இடங்களில் காட்டி, எக்காலமும் தான் உங்களோடு உண்டு தன்னை நம்புவோர்க்கு எக்காலமும் உண்டு என காட்டிவிட்டு சென்றவர் அவர்
இன்றும் தன்னை நம்பும் எல்லோர்க்கும் வழிகாட்டுகின்றார் அந்த அருகம்புல் சித்தர்
அவரின் பூதவுடல் கன்னியாகுமரி மகாதானபுரத்தில் சமாதி செய்ய முதலில் முயற்சிக்கபட்டது, பின்னர் நாகர்கோவிலின் அங்கமான கோணம் எனும் இடத்தின் தனிமையான இடத்தில் சமாதி வைக்கபட்டது
இன்று அது அருகம்புல் சித்தர் தபோவனம் என பெரிய தவபூமியாக விளங்குகின்றது, நடக்கும் அற்புதங்களும் அங்கு கிடைக்கும் ஆன்மீக அலைகளும் பெரும் சிலாகிப்பானவை, மனதை பிரபஞ்சத்தின்பால் ஈர்த்து கரைத்து போடும் அலைகள் அவை
வல்லநாடு சித்தர் சமாதிக்கு அடிக்கடி சென்றிருகின்றோம் அதே அலையினை நேற்று அருகம்புல் சமாதி சித்தரின் சன்னதியிலும் உணரமுடிந்தது
அற்புதமான பசுமையான சூழலில் ஆழ்ந்த அமைதியில் சித்தரின் சமாதி சன்னதி அமையபெற்றிருக்கின்றது , விநாயகர் அருளோடு அது ஸ்தாபிக்கபட்டிருகின்றது
வாசலில் பிள்ளையாட்பட்டி விநாயகர் படமும், இன்னொரு பக்கம் அவரின் குருவான வல்லநாடு சித்தர் படமும் வைக்கபட்டுள்ளது, வாலை குமரியின் அருள் பெற்றவர் என்பதால் அவளின் படமும் அருகில் வைக்கபட்டிருக்கின்றது, கன்னியாகுமரியில் இருந்தபடி மாயம்மா முதல் எல்லா சித்தர்களின் ஆதார சக்தியினை தருபவள் அவளே, விவேகானந்தருக்கும் பெரும் ஞானம் தந்தவளும் அவளே
அந்த சித்தரின் சமாதியில் அமர்ந்திருந்தபோது விநாயக பெருமானின் அருள் அவரோடு இருந்ததை இன்றும் இருப்பதை மனதால் உணரமுடிந்தது
ராதாபுரம் அருகே பிறந்த அந்த பிராமணர், அதுவும் ஜோதிடத்தில் உச்சம்பெற்ற பிராமணர் பிரபல ஜோசியராகவே மறைந்திருக்க வேண்டியவர் தனக்கான குருவினை தேடி வல்லநாட்டில் அடைந்து அவரின் அருளில் தேசமெங்கும் சுற்றி பெரும் ஞானத்தை பெற்று அதை சித்தியாக்கி இந்த மக்களுக்கு ஞானவழியாக லவுகீக நல்ல வழியாக காட்டி இன்றும் தன் வெளிச்சமான ஜோதியான ஆத்மாவினால் மக்களுக்கு அவர் விநாயக பெருமான் வழியில் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்
தென்முனை என்பது மாபெரும் சூட்சுமம் நிரம்பிய இடம் அங்கே பிரபஞ்ச சக்தி குவிந்து கிடக்கின்றது, ஏராளமான சித்தர்களை ஞானியரை அது உருவாக்கி கொண்டே இருக்கும், அப்படி உருவான விநாயகரின் சீடர் அரூபமாக எப்போதும் மக்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்
நாகர்கோவில் செல்லும்போது நாகராஜ கோவில், சுசீந்திரம் கோவில் வரிசையில் இந்த தபோவனத்தையும் காண தவறாதீர்கள், விநாயக பெருமானின் பக்திக்கு சாட்சி சொல்லும் மாபெரும் மகான் அங்கு அரூபமாய் உங்களுக்காக காத்திருக்கின்றார், உங்கள் சிக்கல் அழுகை கண்ணீர் மனவேதனை என எல்லாமும் ஒரு கொத்து அருகம்புல் முலம் தான் ஏற்று உங்களை வாழவைப்பார்
அங்கோர் விளக்கு ஏற்றி வையுங்கள், சித்தரே தன் குரு வல்லநாடு சுவாமிகள் தீபம் எரிந்தால் பாவம் எரியும் என சொன்னபடி அவர் தன் சமாதியிலே பொறித்தபடி தீபமேற்றி வணங்குங்கள் எல்லா பாவமும் தீர்ந்து நலமே உங்களை சூழும்
அப்படியே விநாயக பெருமானை மனமார பணிந்து சித்தரிடம் வேண்டுங்கள், உங்கள் வாழ்வு அதன்பின் முழுமையாக மாறும், விநாயக சதுர்த்தியன்று இந்த சித்தரை மனமார வணங்குங்கள், எல்லா நலமும் அந்த யானமுக கடவுள் உங்களுகக்கு நிரம்ப தருவார் இது சத்தியம்
நன்றிங்க ஐயா சிவாய நம











