நான் உங்களுக்கு நல் ஒழுக்கத்தை போதிக்கவில்லை ; மேலும் புண்ணியச்செயல்களையும் போதிக்கவில்லை ; காரணம், உங்களிடம் விழிப்புணர்வு இல்லாதபோது அவைகள் எல்லாம் வெறும் பாசாங்குகள் , போலித்தனமானவைகள் என்பதை நான் அறிவேன். அவைகள் உங்களை போலியானவராக்கிவிடும்.
— ஏற்கனவே தேவைக்கும் அதிகமாக நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள்– அவைகள் உங்களை விடுதலை அடையச் செய்யாது ; அதற்கு மாறாக உங்களைச் சிறைப்படுத்தி விடும்.
ஒரே ஒரு விஷயம் மட்டுமே போதுமானது. விழிப்புணர்வு . அது மட்டுமே எல்லாவற்றையும் திறக்கும் திறவுகோல் ; இயற்கையில் உள்ள எல்லா பூட்டுக்களையும் திறக்கும் சாவி அதுதான்.
அப்போது நீங்கள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல இருப்பீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் “பிரதிபலிப்பீர்கள்”. நீங்கள் அந்த அளவுக்கு முழுமையாக பிரதிபலிப்பதால் அதிலிருந்து எந்த செயல் பிறந்தாலும் அது சரியானதாக இருக்கும் . உங்களால் தவறு செய்யவே முடியாது . அது அந்த நொடிக்கு 100% பொருந்திப் போகும்.
அந்த செயல் உண்மையில் உங்களுக்குள் எழுவதில்லை. அதைச் செய்பவர் நீங்கள் அல்ல. “அது, அப்போது உள்ள சூழல், நீங்கள் மற்றும் எல்லாம் சேர்ந்த ஒரு முழு சந்தர்ப்பமாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த முழுமையில் இருந்து தான் அந்த செயல் பிறக்கும்.” அது உங்கள் செயல் ஆகாது ; அது உங்களது முடிவு அல்ல ; உங்கள் எண்ணம் அல்ல ; உங்கள் குணநலன் அல்ல ; அது நிகழ்வதற்கு நீங்கள் அனுமதி மட்டுமே அளிக்கிறீர்கள்.
விழிப்புணர்வான செயலில் பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்ற பன்மைகள் இல்லை. உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமெனில், நீங்கள் பாவம் என்றோ கெட்டது என்றோ செய்யவே முடியாது. அந்த முழுச் சூழலும், ஒத்திசைவும் உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவற்றிற்கும் நல்லதாகவே அமையும்.
ஆகவே நீங்கள் உங்களை மீண்டும் மீண்டும் சிறைக்குள் தள்ளாதீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தான் சிறைக்குள்ளேயே வாழ்வீர்கள்.
தன்னுணர்வோடு இருங்கள்.











