சிறப்பு மிகுந்த ஆடி மாதம் பிறப்பு.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி
விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று
பக்தி மணம் கமழும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி
செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின்
மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண
பாக்யம் கைகூடும்,
நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி
கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது
தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக
கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின்
நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன்
செல்வதே ஆடி மாத துவக்கம்.
தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ
சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும்
ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது!
ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.
இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது. தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.
நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.
நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர்.
அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு mஏற்றி வைப்பர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர்.
ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.
அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள்.
இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.











