*பிரார்த்தனைகளும் தியானங்களும்*
ஜூன் 9, 1914
எம்மனே, திவ்ய ஐக்கியமாகிய எரிநெருப்பில் பற்றிக் கொண்ட அர்ப்பணத்தைப்போல நின் முன் நிற்கிறேன்….
இவ்வாறு உன் முன்னால் நிற்பது எது? இந்த வீட்டினுள் இருப்பவையெல்லாம், அதிலுள்ள கற்களெல்லாம், அதன் வாசலைத் தாண்டுவோரெல்லாம். அதைக் காண்போர் எல்லாம். எந்த வகையிலாவது அதனுடன் தொடர்பு கொண்டவர்க ளெல்லாம், அப்படியே ஒருவரிடமிருந்து ஒருவராக இவ்வுலகம் முழுவதும்.
இந்த மையத்திலிருந்து, நின் ஒளியாலும் அன்பாலும் ஊடுருவப்பட்டுள்ள இந்த எரியும் அடுப்பிலிருந்து, நினது சக்திகள் உலகம் முழுவதும் பரவப்போகின்றன. வெளிக்குத் தெரிந்தும் தெரியாமலும் அனைவரின் இதயங்களிலும் சிந்தனைகளிலும் பரவப்போகின்றன…..
நின்பாலுள்ள எனது ஆர்வத்திற்கு விடையாக நீ எனக்கு இந்த உறுதியை அளிக்கிறாய்.
ஒரு பிரமாண்டமான அன்புஅலை எல்லாப் பொருட்கள் மீதும் வந்திறங்கி அவற்றை ஊடுருவிச் செல்கின்றது.
புவியெல்லாம் சாந்தி, சாந்தி, வெற்றி, நிறைவு, ஆச்சரியம்.
துக்கப்படுகிற அறிவற்ற அன்புக்குழந்தைகளே, புரட்சி செய்து கொந்தளிக்கும் இயற்கையே, உங்கள் இதயங்களை திறந்திடுங்கள், உங்களுடைய சக்திகளை அமைதிப் படுத்துங்கள். இதோ அன்பின் இனிய சர்வவல்லமை வருகிறது, இதோ உங்களுள்ளே ஊடுருவிப் பாயும் ஒளியின் தூய பிரகாசம். மனிதனின் இந்த வேளை, புவியின் இந்தவேளை, மற்றெல்லா வேளைகளைக் காட்டிலும் அழகானது. ஒவ்வொருவரும், அனைவரும், அதை அறிந்து, தங்களுக்கு அருளப்படும் இந்த நிறைவில் மகிழ்வார்களாக.
துயறுறும் இதயங்களே, கவலைதோய்ந்த முகங்களே, அறியாமை இருளே, அஞ்ஞானத் துவேஷமே உங்களுடைய வேதனை அடங்கி மறையட்டும்.
இதோ புதிய வாக்கின் காந்தி வருகின்றது;
*”நான் இதோ இருக்கிறேன்”*
ஸ்ரீ அன்னை










