காற்றை நிரப்பி விற்பனை செய்கிறார்கள்
ஏன் கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட் காற்றால் ஊதி பெருத்திருக்கிறது? காரணம் தெரிந்தால் கம்பெனியை குறை சொல்ல மாட்டோம்!
நிறைய கடைகளுக்கு வெளியே, லேஸ், குர்க்குரே பாக்கெட்டுகள் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். நம்ம லோக்கல் பிராண்டில் வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளுக்கும், அதற்கும் ரொம்பவே வித்தியாசம் தெரிந்தது.
ஐந்து ரூபாய் பாக்கெட், இருபது ரூபாய் சைஸில் இருக்கும். வாங்கி உடைத்த உடனே, புஷ்! என்று காற்று தான் வெளியேறும்.
என்னடா இது? இப்படி ஏமாத்து வேலையா இருக்கே! உள்ள காற்றை மட்டும் அடைத்து வைத்து நம்மை ஏமாற்ற பார்க்கிறார்களா? என்று கோபம் வந்து விட்டது. அதற்கு பிறகு கடையில் லேஸ், குர்க்குரே பாக்கெட்டுகள் வாங்குவதையே நிறுத்திவிட்டேன். ஒரு நாள் டிஸ்கவரி சேனலில் சிப்ஸ் தயாரிக்கும் முறை பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டிருந்தது.
அதிலும் பாக்கெட் செய்யும் செக்சன் வந்த உடனே, சிப்ஸ் பாக்கெட்டுக்குள் காற்றை நிரப்பி பேக் செய்தனர். அப்போ தான் உண்மை தெரிந்தது. ஓ! இது எல்லா இடத்திலும், கடைபிடிக்கும் முறை தானா என்று. ஏன் காற்றை நிரப்ப வேண்டும்? அதில் ஏதாவது உள்குத்து இருக்கா என்பதை தேட ஆரம்பித்தேன்.
அதிலிருந்து சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.
பொதுவாக சிப்ஸ் நொறுங்கும் தன்மை கொண்டது என்பதால், பாக்கெட்டில் காற்றை நிரப்பாமல் பேக் செய்தால், பேக்டரியில் இருந்து, நம் கைகளை வந்து சேர்வதற்குள் நொறுங்கிவிடும்.
காற்றடைக்கப்பட்ட பாக்கெட்டாக இருந்தால், ஒன்றன் மீது ஒன்று விழுந்தாலும், பெரிய அளவில் அழுத்தம் உண்டாகாது. சிப்ஸ் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
அடுத்து வெறும் சிப்ஸ் அப்படியே பேக் செய்யப்பட்டால், பாக்கெட்டுக்குள் இருக்கும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து விரையில் கெட்டுப்போய்விடும். அதனால் ஆக்சிஜனை நீக்கிவிட்டு, பாக்கெட்டுக்குள் நைட்ரஜன் வாயுவை நிரப்பி பேக் செய்வார்கள். இதனால் ரொம்ப நாள் சிப்ஸ் கெட்டுப்போகாமல் இருக்கும்.
லோக்கல் பிராண்டு சிப்ஸ் வாங்கினால், சில நாட்களில், முக்க நாற்றம் வருவதற்கு காரணம் இதுதான். கம்பெனி பிராண்டுகள் ரொம்ப நாள் கெட்டுப்போகாமல் இருக்க, அவற்றினுள் நிரப்பப்பட்டிருக்கும், நைட்ரஜன் வாயுவும் முக்கிய காரணமாகும். இது தெரியாமல், காசு பார்க்கத்தான், காற்றை நிரப்பி விற்பனை செய்கிறார்கள் என்று முதலில் தவறாக புரிந்து கொண்டேன்.










