ஒரு காலத்துல உள்ளூர்ல ஹோட்டல்ல சாப்பிடப் போறேன்னா?
வீட்டுல, மரத்தடியிலன்னு இட்லி, இடியாப்பம் சுட்டு விக்கிறதுதான் எங்க ஊர்ல முதல் உணவகங்கள்னு சொல்லலாம். உடல் உழைக்கும் ஏழைபாழைகளுக்கு அது பேருதவியா இருக்கும். ரிக்ஷாக் காரர்கள், கூலித்தொழிலாளிகள், ஒர்க்ஷாப், லேத்களில் வேலை செய்பவர்கள் வந்து சாப்பிடுவார்கள்.
அப்புறம் டீக்கடைகள் வந்தன. பிற்பாடு அதில் காலையுணவு மட்டும் பரிமாறினார்கள்.
தண்ணியடிச்சுட்டு போய் சாப்பிடுறதுக்குன்னு கெளப்புக் கடைங்கதான் இருக்கும் அப்பல்லாம். கிளப் கடையைத்தான் கெளப்புக் கடைம்பாங்க. ஈவ்னிங் புரோட்டா ஸ்டால்னு சொல்வாங்க. பச்சைக் கலர் ட்யூப் லைட் போட்டுருப்பாங்க வெளில. அதான் அந்தக் கடைகளுக்கு அடையாளம்.
அப்புறம் அப்புறம்லாம் ஹோட்டல்னே பேரு வச்சு உணவகங்கள் வந்துச்சு. அப்புறம் வீட்டுச் சாப்பாடுன்னு சொல்லி மெஸ்னு வந்துச்சு. வெளியூர், சுத்துப்பட்டு ஊர்கள்ல இருந்து வர்றவங்க, இங்கே தங்கிருந்து வேலை பார்க்குற வெளியூர்க்காரர்கள்னுதான் ஆட்கள் போய் சாப்பிடுவாங்க.
என்னைக்காவது ஒருநாள் குடும்பத்தோட ஈவ்னிங்ல போய் சாப்பிடுவாங்க. பார்சல் வாங்கிட்டுப் போயும் சாப்பிடுவாங்க. அப்பல்லாம், சட்னி, சாம்பார், குழம்புக்கெல்லாம் நாமதான் பாத்திரம் எடுத்துட்டுப் போகனும். அதிகளவு உணவுன்னா, ஹோட்டல் காரங்களே பாத்திரத்துல கொடுப்பாங்க. அப்புறம் நாம திருப்பிக் கொடுக்கனும்.
இப்பல்லாம் ஊர்ல ஏகப்பட்ட ஹோட்டல், மெஸ், பரோட்டா ஸ்டால், துரித உணவகம்னு வந்துருச்சு. யாருமே வீட்டுல சமைக்கிறதில்லையான்னு கேக்குற அளவுக்கு கூட்டமும் அலைமோதுது.
முன்னாடிலாம் உணவகத்துல விருந்தோம்பல் இருந்துச்சு. வீட்டு விசேசத்துல பந்தி பரிமாறுற மாதிரி, கேட்டு கேட்டு உபசரிப்பாங்க. இப்ப வியாபாரமாப் போனதால, ஆனாலும், ஒருசில உணவகங்கள் தன்மையாத்தான் இருக்காங்க.











