மஹாளய அமாவாசை செய்யவேண்டியவை என்ன.?
முன்னோர்களை வழிபட உகந்த சனிக்கிழமையில் வரும் மஹாளய அமாவாசை செய்யவேண்டியவை என்ன.?
இறந்துபோன நம் முன்னோர்கள் எப்போதும் பித்ரு லோகத்திலேயே இருப்பதில்லை. அவரவர் செய்த பாவ
புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பார்கள். அவ்வாறு ஒருவர் எந்த உயிராகப் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு
நாம் இடும் உணவின் சத்து கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கிறது சாஸ்திரம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை, `மஹாளய அமாவாசை’ என்று
சிறப்பித்துக் கூறப்படுகிறது. அதிலும் சனிக்கிழமையில் அமாவாசை வருவது மிகவும் விசேஷம். இதற்கு முன்பு, 1999
-ம் ஆண்டு இதேபோன்று சனிக்கிழமையில் அஸ்த நட்சத்திரத்தன்று மஹாளய அமாவாசை வந்தது. அதன்பின்
இருபது ஆண்டுகள் கழித்து 2019 ம் ஆண்டு வந்தது, தற்போது மீண்டும் அப்படியொரு புண்ணிய பலன்மிகுந்த நாள்
நமக்கு வாய்த்திருக்கிறது.
ஏன் முன்னோரை வழிபட வேண்டும்.?
உலகில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஐந்துவிதமான கடன்கள் உண்டு என்பர். அவற்றுள் மூன்று கடன்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று தேவ கடன்; இரண்டு ரிஷி கடன் மூன்று பித்ரு கடன். இதில் தேவ கடனும் ரிஷி கடனும் நாம் விவரம் அறிந்த நாள்களிலேயே நமக்குப் பொறுப்பாக மாறிவிடுகின்றன. ஆனால், பித்ரு கடன் குறித்து மட்டும் ஒருவன் தன் தகப்பன் இருக்கும்வரையில் கவலைப்படத் தேவையில்லை.
தந்தை காலமானதும் அதுநாள்வரை அவர் கடைப்பிடித்துவந்த பித்ரு கடன் மகனுக்கு உரியதாகிவிடும்.
இதைக்கடமை என்று சொல்லாமல் கடன் என்று சொல்வது ஏன்? ‘கடமை தவறினாலும் கடனில் தவறக்கூடாது’ என்பார்கள் பெரியோர்கள். மேலும் இந்தக் கடன் நமக்கு ஜன்ம ஜன்மமாகத் தொடர்வது என்கின்றன சாஸ்திரங்கள்.
பிறவியும் வாழ்வும் அளித்ததால் இறைவனின் அருளுக்கும் வேதம் முதலிய ஞானங்களை அளித்ததற்காக ரிஷிகளுக்கும் நாம் கடன்பட்டவர்களாகிறோம். எவ்வளவு முறை யக்ஞம் மற்றும் வழிபாடு செய்தாலும் அந்தக் கடன்கள் தீர்வதில்லை. அதுபோலவே பித்ரு கடனும் கட்டாயம் தலைமுறை தலைமுறையாகச் செய்துவரவேண்டியவை.
🌑
தெய்வங்களுக்கு உகந்த காரியங்களைச் செய்யும்போது பக்தியுடனும் பித்ருக்களுக்கு உரிய காரியங்களைச் செய்யும்போது சிரத்தையுடனும் செய்யவேண்டும். சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம் என்பதாலேயே ஆண்டுக்கொருமுறை செய்யும், முன்னோர்களுக்கு அன்னமிடும் சடங்கை `சிராத்தம்’ என்கிறோம்.
🌑
பொதுவாக மூன்று வழிகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிராத்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்குக் கால்கழுவி தட்சிணை கொடுப்பது. மூன்றாவது அன்ன சிராத்தம். இவை மூன்றுமே விசேஷமானவை என்றாலும் வசதி அற்றவர்கள் குறைந்தபட்சம் தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.
இன்றைய காலத்தில் இந்தச் சடங்குகள் குறித்துப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. எள்ளும் தண்ணீரும் விட்டு வழிபடுவதால் என்ன நன்மை நிகழ்ந்துவிடும் என்று வினா எழுப்புகிறார்கள். இவை குறித்து நம் வேதங்களும் சுருதிகளும் மிகவும் விளக்கமாகப் பேசுகின்றன.
🌑
மஹாளய பட்ச சமயத்தில் விஸ்வே தேவாதி தேவர்கள், மனிதர்களுக்குப் புண்ணியம் ஏற்படச் செய்ய பூவுலகில் வந்து தங்குகிறார்கள். விஸ்வே தேவர்களே நாம் செய்யும் கர்மாகாரியங்களில் தரும் உணவையும் எள்ளையும் தண்ணீரையும் ஏற்று அதன் பலன்களை உரிய ஆத்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்கள் என்கின்றன வேதங்கள்.
🌑
இறந்துபோன நம் முன்னோர்கள் எப்போதும் பித்ரு லோகத்திலேயே இருப்பதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பார்கள். அவ்வாறு ஒருவர் எந்த உயிராகப் பிறந்திருந்தாலும் அல்லது பித்ருலோகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நாம் இடும் உணவின் சத்து கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கிறது சாஸ்திரம்.
இதற்கு உதாரணமாக, அந்த ஆத்மா மாடாகப் பிறந்திருந்தால் அதற்கு வைக்கோலாகவும் குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாகவும் இவை மாற்றப்பட்டுக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கின்றன.
மனிதர்களாகவே பிறந்திருந்தாலும் அவர்களுக்கு அதன்பலன் போய்ச் சேரும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தியே நமக்கு ஆசீர்வாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
பித்ருலோகத்திலேயே நம் முன்னோர்கள் இருந்தால் அவர்கள், நாம் செய்யும் கர்மாக்களால் மகிழ்ந்து நமக்கு மனமார ஆசி வழங்குவர்.
இதனால் இந்த வாழ்வில் துன்பங்கள் நீங்கி நன்மைகளையும் சுகத்தையும் அடையலாம். `எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன’ என்று பலரும் சோதனைகளின் காரணம் அறியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அருமருந்தாக அமைவது முன்னோர் வழிபாடு.
🌑
குறிப்பாக நவகிரக மாற்றங்களால் நிகழும் கெடுபலன்களைக் குறைக்கும் வலிமை முன்னோர்களின் ஆசிகளுக்கு உண்டு. எப்படித் தன் குழந்தையைக் கல்லிலும் முள்ளிலும் நடக்கவிடாமல் ஒரு தந்தை சுமந்து செல்வாரோ அதேபோல பித்ருக்களின் ஆசி நம்மை வாழ்வில் பெரும் சிரமங்களைச் சந்திக்காமல் கடந்து செல்ல உதவும்.
நாளை, மஹாளய அமாவாசை. சனிக்கிழமை வரும் இந்த அமாவாசை தினத்தில் தந்தையில்லாதவர்கள் தவறாமல் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுங்கள். தமிழ் மரபில் ‘தென்புலத்தார் வழிபாடு’ என்று இந்த வழிபாடு போற்றப்படுகிறது. அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.
🌑
எள் சனிபகவானுக்கு உரிய தானியம். எனவே, இந்தச் சடங்கைச் செய்வதன்மூலம் சனிபகவானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். இயன்றவர்கள் வறியவர்களுக்கு உணவும் வஸ்திரமும் தானம் செய்யுங்கள்.
அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி, நமக்கு மன நிம்மதியையும் செல்வச் செழிப்பையும் கொண்டு சேர்க்கும்.
🌑
எனவே வரும் சனிக்கிழமை ( 14.10.23 ) தவறாது முன்னோரை வழிபடுங்கள்.











