ரங்கநாதன் தெருவில், செல்வரத்தினம் மளிகைக் கடை வைத்தாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, அதற்கு
முந்தைய ஒரு வரலாற்றைப் பார்க்கலாம். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் 1948-ல் தி.நகர் ரங்கநாதன் தெருவில்
வசித்துவந்தார். தி.நகரில் தாம் வசித்த அனுபவம் குறித்து அவர் எழுதி இருக்கும் தகவல்களைப் பார்க்கலாம்.
“ரங்கநாதன் தெருவில் உள்ள ஒன்பதாம் நம்பர் வீட்டில் நானும், என் குடும்பத்தினரும் வசித்துவந்தோம். அப்போது குடிநீருக்குக் கடும்
அசோகமித்திரன்பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக அரை கி.மீ தள்ளி இருந்த தாமோதர ரெட்டி தெருவில் இருக்கும் எங்களது
உறவினரின் வீட்டுக்குச் சென்று குடிநீர் பிடித்துவருவோம்.
தாமோதர ரெட்டி தெருவில் இருந்து பார்த்தால், கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், பிணங்கள் எரியும் புகையைப் பார்க்கலாம்.
சிலநேரம் பிண வாடையையும் உணரமுடியும். தாமோதர ரெட்டி தெருவிலும் எங்கள் குடும்பம் 5 ஆண்டுக்காலம் வசித்துவந்தது.
தி.நகரில் இப்போது இருக்கும் சிவா விஷ்ணு கோயில் அப்போது ஒரு கிராமத்துக் கோயில்போல இருந்தது.
இந்தக் கோயில் முன்புதான் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்போது 9, 10, 11ஏ, 12 மற்றும் 13 எண்கள் கொண்ட பேருந்துகள்
தி.நகரிலிருந்து கிளம்பும். ரயில் செல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகளில் மக்கள் பயணித்தனர்.
ரங்கநாதன் தெருவில் வசித்தபோது, வீட்டில் இருந்து ரயில் போகும், வரும் சத்தங்கள் கேட்கும். இப்போது பேருந்து நிலையம் இருக்கும்
இடத்தில் ஒரு சிறிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையில் இருந்த தண்ணீரில் நிறைய எருமை மாடுகள் ஊறிக்கொண்டிருக்கும்.
பிறகு அந்தக் குட்டை தூர்க்கப்பட்டுப் பொதுக்கூட்ட மைதானமாக உபயோகிக்கப்பட்டது.
அங்கு ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன், மா.பொ.சி., முத்துராமலிங்கனார், சின்ன அண்ணாமலை ஆகியோர் எல்லாம் பேசி இருக்கிறார்கள். அவர்களது உரைகளை நான் கேட்டிருக்கிறேன். இப்போது மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் இருக்கும் இடங்களில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தன.
ரயில்வே கேட்டைக் கடக்க முயன்று மாதத்துக்கு இரண்டு பேராவது உயிரிழப்பார்கள். அந்தக் காலத்தில் தி.நகர் அமைதியாக இருக்கும்
அமைதியாக இருந்த தி.நகரும், ரங்கநாதன் தெருவும்தான் இப்போது ஆசியாவின் முக்கிய வணிக மையங்களாகத் திகழ்கின்றன. தென் மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரகள், அந்தக் காலத்தில் ஏதாவது ஓர் ஊருக்குப் போய் மளிகைக் கடை வைத்துக்கூடப் பிழைப்பை ஓட்டுவார்கள்.
தெரியாத ஊரில்கூடத் தொழில் செய்து வாழ்க்கையை நடத்துவார்கள். அப்படி ஒரு நம்பிக்கையில்தான் செல்வரத்தினம் தமது கிராமத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பிவந்தார்.
ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய செல்வரத்தினம், சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரத்தைச் சந்தித்தார். “மளிகைக் கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு சோமசுந்தரம், “மளிகைக் கடை வைத்தால் அது இந்தப் பகுதியில் இப்போதைக்கு எடுபடாது. எல்லோரும் கொத்தவால் சாவடி போய் அங்குதான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். ரங்கநாதன் தெருவில் கும்பகோணம் பாத்திரக்கடை இருக்கிறது.
அதை நடத்துகிறவர், கடை மற்றும் கட்டடத்தை அப்படியே விலைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். நீங்கள் வேண்டுமானால், அதை வாங்கிப் பாத்திர வியாபாரம் செய்யுங்கள். நன்றாகப் போகும்” என்று அறிவுறுத்தினார்.
சோமசுந்தரத்தின் யோசனைப்படி கும்பகோணம் பாத்திரக் கடையைக் கட்டடத்தோடு சேர்த்து தனபாலிடமிருந்து செல்வரத்தினம் விலைக்கு வாங்கினார். இந்தப் பாத்திரக் கடைதான் இன்றைக்கு சரவணா ஸ்டோர்ஸ் ஆக உருவாகி இருக்கிறது.
ரங்கநாதன் தெரு 1970-க்குப் பிறகுதான் கொஞ்சம்கொஞ்சமாக முகம் மாறத் தொடங்கியது. அதுவரை ஓட்டுவீடுகளுமாய், கொல்லைப்புறத்தில் தென்னை மரங்களுமாய், மாட்டுத் தொழுவங்களுமாய் இருந்த வீடுகளின் பகுதிகள் எல்லாம் கடைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டன. வீடுகளின் முதல் மாடியில் வீட்டு உரிமையாளர்கள் வசிக்கத் தொடங்கினர். மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே ஹோட்டல், மளிகைக் கடை, பாத்திரக் கடை என்று ஒரு கதம்பக் கடைத்தெரு உருமாறத் தொடங்கியது.
இதுதவிர, தெரு முழுவதும் பிளாட்ஃபாரத்தில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் இருந்தன. வெளியூர்களில் இருந்து ரயிலில் காலையில் கொண்டுவரப்படும் காய்கறிகள்… விலை மலிவாக ரங்கநாதன் தெருவில் விற்கப்பட்டன.
ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிச் செல்வோர், வேலை முடிந்து ரயில் நிலையத்துக்கு வருவோர்களைக் குறிவைத்துத்தான் ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைகள் முளைத்தன. ரங்கநாதன் தெரு மொத்தமும் கடைகளாக மாறிவிட்ட நிலையில், இன்றைக்கும் அந்தத் தெருவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், பலர் நடக்கின்றனர் மற்றும் வெளிப்புறம் ,










