மகளுக்கு விவாகம் நிச்சயமாக வேண்டும்”- தீட்சிதர்
“காலையில் பார்ப்போம்” – பெரியவா
1983 ம் வருடம். குல்பர்கா நகரின் அருகில் இருந்த மகாகாவ் என்னும் இடத்தில் மகான் முகாமிட்டு இருந்தார். பாபு தீட்சிதர் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்.
மகானுக்கு அன்று மௌன விரதம். திருவீழிமிழலை
என்னும் திவ்ய க்ஷேத்திர மகாத்மியம் பற்றிய புத்தகம் ஒன்றை பாபு தீட்சிதர் சொல்ல, அதை வாசிக்கும்படி ஜாடை காட்டினார் மகான்.
ஜன்னலுக்கு உள்ளே மகான், வெளியே பாபு தீட்சிதர், இரவு 7-30 மணி முதல் 11-00 வரை வாசிப்பு தொடர, அதைக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான். இப்படி பல நேரங்களில் பலரை வாசிக்கச் சொல்லி மகான் அமைதியாக செவிமடுப்பதும் உண்டு. பாபு தீட்சிதர் வாசித்துக் கொண்டு இருக்கும் போதே, மகா பெரியவா தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். வரலாறு நன்றாக இருப்பதாகவும், எல்லோருக்கும் புரியும்படி இருப்பதாகவும் பாராட்டினார்.
“க்ஷேமத்துடன் இருப்பாய்” என்று தீட்சிதருக்கு ஆசி வழங்கினார். தான் வந்த விஷயத்தைப் பற்றி பேசவே இல்லையே என்று நினைத்த தீட்சிதர், தன் மகளுக்கு விவாகம் நிச்சயமாக வேண்டும் என்று மகனிடம் வேண்டினார்.
“காலையில் பார்ப்போம்” என்று கூறிவிட்டார் மகான்.
ஏன் மகான் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் தீட்சிதர்
கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வில்லை. எப்படியும் அவரது அருளாசி தன் மகளுக்குக் கிடைக்கும் என்று நம்பினார்.
மறுநாள் காலை எட்டுமணி.
பெரியவா அழைப்பதாகச் சொல்ல, தீட்சிதர் மகான் இருக்குமிடம் விரைந்தார்.
“நீ கவலைப்பட வேண்டாம். உன் பெண்ணுக்கு கல்யாணம் நடந்து சௌகர்யமாக இருப்பாள்” என்று ஆசீர்வாதம் செய்தார்.” சாட்சாத் பகவானே ஆசி வழங்கியது போலிருந்தது” என்றார் தீட்சிதர்.
மகான் இன்னொரு காரியத்தையும் செய்தார்…..
“இவன் வெளியில் சாப்பிட மாட்டான்.. ரொம்பவும் ஆசாரம் உள்ளவன். “பொரியில் தயிரைக் கலந்து கொடு” என்று உத்தரவிட்டார்.
எப்படியெல்லாம் பக்தர்களின் சேவையைக் கவனிக்கிறார் மகான்?
தீட்சிதர் ஊருக்கு வந்ததும், அவர் காதில் விழுந்த முதல் செய்தி பயங்கரமானதாக இருந்தது. எந்த இரவு, தன் மகளின் திருமணத்தைப் பற்றிப்
பேசினாரோ, அன்று அவரது மகளுக்கு பிராண அவஸ்தை ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்திருக்கிறார். சரியாக காலை எட்டு மணிக்கு பெரியவா அவரை அழைத்த நேரத்தில் இங்கே மகள் பூரண குணமடைந்திருக்கிறாள்.
“காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று அந்த கருணாமூர்த்தி இதற்காகத்தான் சொன்னாரோ?
முக்காலும் உணர்ந்த அந்த கருணை மேன்மையை
எண்ணி உருகி நின்றார் பாபு தீட்சிதர்.










