‘ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷம்’
அற்புதமான பலன்களை அள்ளித் தரும் ‘ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷம்’. சிவபெருமானை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு
சகல விதமான தோஷங்களும் நீங்கி சௌபாக்கியமான வாழ்வு கிடைக்கும்.
சிவனை வழிபடுபவர்களுக்கு நமனை விலகும் எனக் கூறுவார்கள். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது
வெளிப்பட்ட “ஆலகால நஞ்சு” உலகில் இருக்கின்ற உயிர்களை அழித்து விடக்கூடாது என்கிற கருணையினால் அதை சிவபெருமான்
அருந்தி “நீலகண்டன்” எனும் பெயரினை பெற்றார்.
சிவன் வழிபாட்டிற்குரிய மிகவும் விசேஷ காலமாக வருடம் முழுவதும் வருகின்ற “பிரதோஷம்” தினங்கள் விளங்குகிறது. ஐப்பசி மாத
பௌர்ணமி தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த
மாதத்தில் வருகின்ற ஒரு சிறந்த நாளாக ஐப்பசி தேய்பிறை பிரதோஷ தினம் இருக்கிறது.
அன்றைய தினத்தில் நாம் எப்படி சிவனை வழிபட்டு மிக சிறப்பான பலன்களை பெறலாம்.
☘️
ஐப்பசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷங்கள் “சப்தரிஷி பிரதோஷம்” எனப்படும். “ஐப்பசி, கார்த்திகை,
மார்கழி, தை, மாசி, பங்குனி” மாதங்களில் வானில் தமிழின் “வ” எழுத்து வடிவில் தோன்றும் நட்சத்திர கூட்டமே “சப்தரிஷி நட்சத்திர
மண்டலம்” எனப்படும். சப்தரிஷிகளான “காசியபர், அத்திரி முனிவர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதம மகரிஷி, ஜமதக்னி
முனிவர், பரத்வாஜர்” ஆகிய 7 ரிஷிகளின் அம்சங்கள் நிறைந்தவையாகும்.
எனவே சப்தரிஷி பிரதோஷ காலத்தில் முதலாவதாக வருகின்ற ஐப்பசி மாத வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷங்கள்
சிவபெருமான் கோவிலுக்குச் சென்று சிவன் மற்றும் அம்பாளை வணங்கிய பிறகு, சப்தரிஷிகளின் பெயர்களையும் மனதிற்குள்ளாக
உச்சரித்து வழிபடுபவர்களுக்கு அந்த ரிஷிகளின் அருளும், இறைவனின் அருட்கடாட்சமும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது
பெரியோர்களின் வாக்கு.
☘️
மற்ற பிரதோஷ தினங்களை போன்று, ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்றும் அதிகாலையில் எழுந்து, குளித்து
முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.
ஐப்பசி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள
சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
☘️
பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம்
தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு
நைவேத்தியாமாக வைக்க வேண்டும்.
பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய
தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை
அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை, நாகலிங்க பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன்கள் ஏற்படும்.
☘️
ஐப்பசி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான
தோஷங்களும் நீங்குகிறது. அதிலும் துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியாகின்ற ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை பிரதோஷ
நாளில் சிவன், நந்தீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபாடு செய்வதால் சுக்கிர கிரக தோஷங்கள் நீங்குகிறது.
மனதை வாட்டுகின்ற பொருளாதார ரீதியான கவலைகள் தீரும். பொருளாதார மேன்மைகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு
விரைவில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.










