திருச்செந்தூர் முருகனும் வீரபாண்டிய கட்டபொம்மனும்.
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது.

தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான்.
கட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகன்கோயில்.
கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்து விட்டதை அவர் தெரிந்து கொள்ளும விதமாக
திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.
ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.
திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.
இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்.
அந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணி
யோசையை எழுப்புவான்.
இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.
(இவற்றில் சில மண்டபங்களை இதன் வழியில் தற்போதும் காணலாம்.)
மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள்.
விபூதி கையில் கிடைத்த பிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.
இதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யாமலே இருந்து வந்தது.
இந்த கோபுரத்திலிருந்த மணியோசனையின் மூலமே, அடுத்திருக்கும் மணியை ஒலிக்கச் செய்து, முருகனுக்கு நிவேதனம் ஆகிவிட்டது என குறிப்புணர்த்துவர்.
இயங்காமலிருந்த இந்த மணியை, முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்த
போது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.
மேலும் இவர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற் களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.
குடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடை முறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.
ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம்.
அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.
இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது.
தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.
சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.
தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.
இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.
கட்டபொம்மன் தேர் வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.











