காணிப்பாக்கம், சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்
இக்கோயில் சித்தூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விநாயகர் கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. பின்னர் விஜயநகரப் பேரரசால் இக்கோயில் விரிவாக்கப்பட்டது.
இது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அதிசய விநாயகர் இவர்காணிப்பாக்கத்தில் ஸ்ரீவரசித்தி விநாயகர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய இடம் ஒரு கிணறு. அந்த கிணறு இப்போதும் இங்குள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அந்த பிரசாத தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.
சகோதரர்கள் கிணற்று தண்ணிரை விவசாயத்திற்கு உபயோகித்தனர். கிணரில் தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை, தண்ணீருக்காக தோண்டினர்.
உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை.
எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு “காணிப்பாக்கம்” என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.
நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது.
கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே காட்சியளிக்கிறார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.
காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர்,
யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.
`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.
இவர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்து விடுவார்கள்.
நாம் எல்லோரும் கானிப்பாக்கம் வரசித்தி விநாயகரை தரிசனம் செய்து எல்லா செல்வங்களையும் பெறுவோமாக..!
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அதிகம் பகிருங்கள் சித்தர் அருள் கிடைக்கும். என்றும் இறைபணியில் சித்தர் பூமி











