’தொன்மா இலங்கை’ என்று சங்க நூலான சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கின்ற ஈழ வளநாட்டில் அமைந்துள்ள காரைத்தீவில்
சாமித்தம்பி, கண்ணம்மை இணையருக்குத் திருமகனாய் 1892ஆம் ஆண்டு மார்ச்சு 27ஆம் நாள் பிறந்தவர் விபுலாநந்தர்; அவருடைய
இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும்.
பிள்ளைப்பருவம் எய்தியபின் தம் தந்தையார் உள்ளிட்ட நால்வரிடம் தொடக்கக் கல்வி பயின்ற மயில்வாகனர், பின்பு வைத்தியலிங்க
தேசிகர் என்பவரிடம் தமிழும் வடமொழியும் பயின்றார். தம்முடைய பன்னிரண்டாம் வயதிலேயே செய்யுளியற்றும் பேராற்றல்
கைவரப்பெற்றவரானார்.
ஆங்கில மொழியிலும் புலமைபெற்றுத் திகழ்ந்த மயில்வாகனர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நடத்திய பண்டிதர் தேர்வில்
வெற்றிபெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் வெற்றிபெற்ற முதல் ஈழத் தமிழர் எனும் புகழுக்குரியவர் மயில்வாகனரே ஆவார்.
பின்னர் இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை அறிவியல் (பி.எஸ்ஸி) தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த துறவியான சர்வானந்தர் என்பவர் இலங்கைக்கு வருகை புரிந்தார். யாக்கை
நிலையாமை குறித்து அவரிடம் விளக்கமாகக் கேட்டறிந்த மயில்வாகனருக்கு நிலையில்லா உலக இன்பங்களில் திளைப்பதினும்,
பற்றற்ற துறவுநிலையே உயர்ந்தது எனும் எண்ணம் ஏற்பட்டது. ஆதலால் 1922ஆம் ஆண்டு இராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர், துறவியாவதற்குரிய நியமங்களைக் கடைப்பிடிக்கலானார்.
இராமகிருஷ்ண மடாலயத்தார் அவருக்குப் ‘பிரபோத சைதன்யா’ எனும் தீட்சா நாமத்தை வழங்கினர். மடாலய வாழ்க்கையை
மேற்கொண்டிருந்த காலையில் பிரபோத சைதன்யாவுக்குத் தமிழ்ப் பெரியோர் பலரின் உறவு கிடைக்கலாயிற்று. அவர்களுள்
குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர் உ.வே.சாமிநாதையர், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர்.
இராமகிருஷ்ண மடாலயத்தால் வெளியிடப்படும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் எனும் தமிழ்த் திங்களிதழுக்கும், வேதாந்த கேசரி எனும் ஆங்கிலத் திங்களிதழுக்கும் ஆசியரானார் பிரபோத சைதன்யா. 1924ஆம் ஆண்டு சித்திரைப் பௌர்ணமி நாளன்று சுவாமி சிவானந்தர் ஞானோபதேசம் செய்து சுவாமி விபுலாநந்தர் எனும் துறவறப்பெயரைப் பிரபோத சைதன்யாவுக்கு அளித்தார்.
துறவுநெறியை வாழ்க்கைநெறியாக மேற்கொண்டபோதும் தமிழைத் துறக்கவில்லை விபுலாநந்தர். 1924ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுநிறைவு விழாவில் ’நாடகத்தமிழ்’ எனும் பொருளில் விரிவுரை ஆற்றினார். பின்னர் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அப்பொழிவையே ‘மதங்க சூளாமணி’ எனும் பெயரில் நூலாக்கினார். பண்டிதர்களின் பாராட்டை பெற்றது அந்நூல்.
சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் முகமாக 1927இல் இராமநாதபுரம் அரசர் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு மதுரையில் அமைக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அறிஞர்களின் கருத்தையும் அறிந்துகொண்டு பல்கலைக்கழகம் அமைப்பது எனும் முடிவுப்படி முதலில் அழைக்கப்பட்ட அறிஞர் ஈழத்தைச் சேர்ந்த விபுலாநந்தரே ஆவார்.
விபுலாநந்தரும் இராமநாதபுரம் அரசர் முன்னிலையில் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் கட்டாயம் வேண்டும் என்று சான்றுரைத்தார். அவர் உரைத்தபடியே பின்னாளில் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகம் அமைய இன்றியமையாப் பங்காற்றிய செட்டிநாட்டரசர் சர். அண்ணாமலைச் செட்டியாரை மறவாதிருக்கும் பொருட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் பெயர்சூட்டப்பெற்றது.
பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பேற்கும்படி அண்ணாமலையார் வேண்டிக்கொண்டதற்கிணங்க 1931ஆம் ஆண்டு ஆனித் திங்கள் தமிழ்ப்பேராசிரியராக அங்கே பதவியேற்றுக்கொண்டார் விபுலாநந்தர். மாணவர்களுக்குத் தமிழ்ப்பற்றோடு நாட்டுப்பற்றையும் தம் உரைகளில் வலியுறுத்துவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் அவர்.
விபுலாந்த அடிகளுக்கு இசையிலும் நல்ல ஆர்வமுண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையில் பணிபுரிந்தபோதே தஞ்சையைச் சேர்ந்த க. பொன்னையாப் பிள்ளை எனும் இசைவல்லுநரிடம் கருநாடக இசைப்பயிற்சியும் பெற்ற அவர், பழந்தமிழ் இசை குறித்தும், இசைக்கருவியான யாழ் குறித்தும் தாம் மேற்கொள்ள விரும்பிய ஆராய்ச்சிக்குப் பல்கலைப் பேராசிரியப் பணி தடையாயிருப்பதை உணர்ந்து, 1933ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகி இசை ஆராய்ச்சியில் முழுமூச்சாய் ஈடுபடலானார்.
அடிகளாரின் தமிழ்த் தொண்டின் உச்சம் என்று கருதத்தக்கது பத்தாண்டுகள் அரிதின் முயன்று அவர் உருவாக்கிய யாழ் நூலாகும். இந்த யாழ் நூலானது, பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் எனும் ஏழு பகுதிகளைக் கொண்டது.
இசைத்தமிழின் பெருஞ்செல்வமாய்த் திகழும் யாழ் நூல் விபுலாநந்த அடிகளின் இசையை (புகழ்) என்றும் மீட்டிக்கொண்டிருக்கும்!











