பக்குவம் – 1 கவியரசு கண்ணதாசன்
கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.
கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு
வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.
இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.
இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.
வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது
மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.
பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.
பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.
இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன்
கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.
நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.
கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும்
படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.
காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.
விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.
எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.
பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.
ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.
பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை. மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது
வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’
இதுதான் அந்தப் பழமொழி.
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல,
அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.
ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.
இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.
பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.
நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.
`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.
`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.
அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.
அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற
புத்தி வருகிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன்.
`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.
உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.
தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக
வளர்ச்சியடைகிறது.
அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.
இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.
ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.
சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.
முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.
இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.
மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.
இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.











