பேரருளைப் பாடுதலே
பெருமகிழ்வு தந்திருக்கும்
பேரருளால் வந்ததெல்லாம் பெருமகிழ்வே தந்திருக்கும்
பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஓரருளில் கலந்திருந்தால்
பெருமகிழ்வும் குறைவின்றி நாடோறும் வளர்ந்திருக்கும்!
ஆருமில்லை இங்கெனக்கு எனவெண்ணி வருந்தாமல்
ஆருமில்லாப் போழ்தினிலும் தன்னருளைப் பொழிந்திருப்பாய்!
ஓரருளே நினைப்பற்றி ஓராயிரம் உருக்கொண்டால் ஓரருளாய் ஒன்றிவந்து உலப்பிலா அன்பளிப்பாய்!
தீராத துன்பமெலாம் தினம்வந்து வாட்டுகையில் தீராது இதுவென்றே மனம்வருந்தி வாடுகையில்
தீராதும் தீர்த்துவைக்கும் ஓரருளே! உடனின்று தீராத துன்பமெலாம் தான்வெருட்டித் தீர்த்திடுவாய்!
ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும் ஓராது எனக்கருளும் ஒருதெய்வம் நீதானே பாராது யான்செய்யும் பல்வேறு பாவமெல்லாம் பாராது எனைக்காக்கும் ஓரருளும் நீதானே!
கூரான நாவாலே குத்தியுனைக் கிழித்தாலும் கூறாது கூடவந்து காக்கின்ற ஓரருளே! கூறாது யான்செய்யும் பிழையாவும் நீ பொறுத்துக் கூரான வேலுடனே என் முன்னே வரவேணும்!











