பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம்
ஒரு சிறிய தமிழக கிராமம் பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம் பற்றிப் பேசி நாடு
முழுவதும், உலகம் முழுவதும் ஒரு திடீர் பேசு/தேடு பொருளாக்கி விட்ட பிரதமர் மோடி.
கடவுள் சதுரங்கம் விளையாடிய தலம்…பிரதமர் மோடி மேற்கோள்காட்டிய ஆலயத்தின் தல வரலாறு
“கடவுளே இறங்கி வந்து விளையாடிய ஆட்டம் இது சதுரங்கம்..!!”. ஆனால் ஆதாரத்துடன்
கோவிலின் பெயரையும் ஸ்வாமியின் பெயரையும் அழுத்திச் சொன்னார்.
உடனே உலகம் முழுவதும் அந்த ரீச்…அடேயப்பா!!கோவில் ஸ்தலவரலாறு துல்லியமாக இந்த
விளையாட்டை இறைவன் இறைவி விளையாடியதைக் கூறுகிறது.
ஏன் அங்கு இருந்த பல தமிழர்களுக்கும் கூட இது அரிய செய்தியாகத்தான் இருக்கும்.
பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலயம்
‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம்,
திருப்பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்.
திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூர், நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்,
சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன்:
சுயம்புலிங்கமாக அருள்மிகு சதுரங்கவல்லபேசுவரர், புஷ்பவனநாதர்
இறைவி:கற்பகவல்லி, இராஜராஜேஸ்வரி என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன.
தீர்த்தங்கள் : ஷீரபுஷ்கரணி .மைசூர் நந்திமலையில் உள்ளது போல் தனிச்சன்னதி கொண்டு
ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலிக்கும் தலம் திருப்பூவனூர் ஸ்ரீபுஷ்பவன நாதர் கோவில்
ஆகும்.
இரு அம்பிகையர் அபூர்வமாய் எழுந்தருளும் தொன்மையான பூவனூர் சிவாலயத்தில் ஸ்ரீ
சாமுண்டீஸ்வரி அம்மன் சூலமேந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
நவராத்திரி உற்சவத்தலமாய் சித்தர்கள் போற்றுவதால் கலியுக மகான்கள் ஸ்ரீ போதேந்திர
சுவாமிகள், ஸ்ரீதர அய்யாவாள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் பூஜித்த தலம். இது
தேவாரப்பாடல் பெற்ற 103வது திருத்தலமாகும்.
இத்தலம் சிவபெருமான் சதுரங்க விளையாட்டை (செஸ்) தம் திருவிளையாட்டாய்
உமாதேவியருடன் ஆடித்திருவருளைப் பொழிந்த தலமாகும். இதனால் சுவாமியின் திருநாமம்
ஸ்ரீசதுரங்க வல்லபநாதர்.
சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும் 64 நாட்டிய
நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக புலப்பித்த
தலம். 64 விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள்
கொண்டு பஞ்சசக்திகளால் மகரிஷிகள் ஒவ்வொரு மாத நவராத்திரி உற்சவத்தை கொண்டாடிய
தலம்.
கலியுகத்தில் அம்பிகை மானுடப்பெண்ணாக ஆதிபராசக்தி அம்சங்களோடு திருநெல்வேலியை ஆண்ட வசுசேனன் எனும் மன்னனின் மகளாக அவதரித்து ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்துடன் ஆயகலைகள் அறுபத்து நான்கினும் தேர்ந்தவளாய், குறிப்பாக சதுரங்க ஆட்டத்தில் வல்லவளாய்த் திகழ்ந்து வந்து, தன்னை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவரையே மணப்பேன் என்ற வைராக்கியத்துடன் இருந்தாள்.
அம்பிகையை சதுரங்கத்தில் வெல்ல எவராலும் இயலாமல் போகவே மன்னன் மகளின் திருமண பாக்கியத்திற்காக வேண்டி பல தலங்களை வழிபாடு செய்து பூவனூர் வந்தடைந்தான்.
பூவனூர் தலத்தில் சர்வேஸ்வரனாம் சிவபெருமாள் நரை, திரை மூப்புடைய பழுத்த முதியவர் வேடத்தில் வந்து இளவரசியோடு சதுரங்கம் ஆடினார். இப்போட்டி நடைபெற்றது அமாவாசை நாளுக்கு பிறகு வரும் 9 நாட்களும், மாதாந்திர நவராத்திரி காலமாகும்.
இறுதியில் விஜயதசமி திருநாளில் இறைவன் அம்பிகையை சதுரங்கத்தில் வென்று திருமணம் புரிந்து கொண்டார். மானுடராய் பூவனூருக்கு வந்த சிவன், பார்வதி மூர்த்திகளின் தெய்வ திருமணத்தை தரிசிக்க எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் குழுமி இருக்க சர்வேஸ்வரன் நடனகோலத்தில் காட்சி தந்து அருளினார்.
முதியவராக வந்த சர்வேஸ்வரனை சிவனடியார்களுக்கும், மன்னனுக்கும் உணர்த்தியவர் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் கயிலாயத்தில் மங்களகிரி, புஷ்பகிரியில் உள்ளது போலவே இந்திராதி தேவர்கள் பூவனூரில் வடிவமைத்த அழகியதும்,
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நறுமணப் புஷ்பச்செடி கொடிகளையும் 108 நந்தவனங்களை கொண்டிருந்தமையால் இத்தலத்தில்தான் முதன் முதலில் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் தோன்றினார்.
இத்தலத்தில் ஈஸ்வரன் தன் திருமணத்தில் நடனக்கோலத்தை அருளியமையால், சோமஸ்கந்தர் சன்னதி விளங்குவதற்கு இறைவனே மனமுவந்து அளித்துள்ள சங்கல்பவரம் காரணமாகும்.
இறைவன் திருவருளால் சோமஸ்கந்தர் சன்னதி முன்னால் அபூர்வமாய் ஒரு நந்தீஸ்வரர் காட்சி தருகின்றார். சோமஸ்கந்தர் சன்னதி முன் நந்தீஸ்வரர் அருள்வது மிக அபூர்வம்.
இந்த நந்தீஸ்வரர் தான் மங்கள புஷ்ப நந்தீஸ்வரரின் அம்சமாக மகரிஷிகளால் புலப்படுத்தப்பெற்றவர். மானுடப் பெண்ணாய் பூமியில் தோன்றிய அம்பிகை இத்தலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி தேவியாய் இறைக்கட்டளையால் அருள்கின்றாள்.
நவராத்திரியில் ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் உமையவள் அருளும் கோவில்களில் நவராத்திரி விஜயதசமி பூஜைகளை தக்க விரதத்துடன் கொண்டாடுதல் மகளிர் குலத்திற்கு பன்மடங்கு பலன்களை நல்குவதோடு, இதில் பங்கேற்பதும் வாழ்வில் கிடைத்தற்கரிய அற்புதப்பேறு ஆகும்.
வழிபாடுகளை பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோவிலில் நிகழ்த்திக்கொண்டு உத்தமமான பலன்களை அடைந்து கொள்ளவும், வாழ்க்கையை ஆன்மச்செழுமையுடன் வளமையாக்கிக் கொண்டு இறைப்பேரானந்தம் பெறுவதற்கான எளிய மார்க்கமிது. தக்க வரன் கிடைக்காமல் எங்கே தன் மகள், மகனுக்கு வயதாகிவிடுமோ?
என்ற மனக்கவலையுடன் வாழும் பெற்றோர்கள் பூவனூரின் இவ்வரிய திருமண சக்தித்தலத்தில் நவராத்திரி காலத்தில் புனித நீராடி, விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமண பிராப்தி விரைவில் பூரணிக்கும். ஈஸ்வரன் ஈஸ்வரி இருவருமே மானுட வடிவில் நடந்து வந்து தம் திருப்பாதங்களை பதித்ததலம் பூவனூர்.
மேலும் இருவரும் மானுட குலம் போலவே தம் திருமணத்தை நிகழ்த்தி கொண்டு சர்வகோடி ஜீவன்களுக்கும் அருளிய தலம். சதுரங்க விளையாட்டில் (செஸ்) ஈடுபாடுள்ளோர் வணங்கி வரவேண்டிய தலம்.
நவராத்திரி உற்சவத்திற்கு என ஏற்றம் பெறும் பூவனூர் சிவ, சக்தி, விஷ்ணு பூமி அனைத்து அம்பிகைகளும் உரித்தான நவராத்திரி வழிபாடானது குறிப்பாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சக்தி மூர்த்திகளுக்கும,
ராதை, சாவித்திரி சேர்ந்த பஞ்ச மாதேவியருக்கும் ஏற்றதாகும். ஆதிபராசக்தியானவள் மானுடப் பெண்ணாக தோன்றி வளர்ந்து இறைவனை மணந்து இறைவியாய் அருளும் தலத்தில் உள்ள சக்தி மூர்த்தங்களுக்கு நவராத்திரி உற்சவம் ப்ரீதியானது. பூலோகத்தில் ஈஸ்வரன், ஈஸ்வரி முன்னிலையில் நிகழ்த்தப்பெறும் வழிபாடுகளில், வேள்விகளில் தோன்றுவதாய் ஆதிபராசக்தியின் அவதாரங்களில் துணைக்காக வரும் அம்சம் சாமுண்டீஸ்வரியாகும்.
நவராத்திரி வழிபாடு : இரண்டு அம்பிகையர் உள்ள தலங்களே நவராத்திரி வழிபாட்டுக்கு மிக சிறப்பானது என்பதாலும், நவராத்திரி வழிபாட்டுக்கு மேன்மைதரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சன்னதியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்கி வரும் பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலய சாரதா நவராத்திரி உள்ளிட்ட அனைத்து நவராத்திரிகளுக்கும் மிக உகந்ததாகும்.
பூவனூரில் அகஸ்திய மகரிஷியை மூலிகை சித்தராய் வைத்திய லோகத்து சித்புருஷராய் அருளக்காணலாம். பூவுலகில் ஏற்படும் பாம்பு, தேள், நட்டுவாக்கிளி, எலி, நாய், பூனை போன்றவற்றின் விஷக்கடிகளுக்கும் நிவர்த்தி தரும் வைத்திய சாலையாக பூவனூர் விளங்குவதற்கு சிவபெருமானிடமிருந்து நல்வரத்தை அகஸ்தியர் பெற்றுத்தந்துள்ளார்.
இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகஸ்தியர் பிரானின் ஆசியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகைவேர் ரட்சை கட்டப்பெறுகின்றது.
பூவனூரில் 18–க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்து தற்போது 5 தீர்த்தங்கள் நன்கு உள்ளன. கோவிலுக்கு எதிரே உள்ள ஷிர புஷ்கரணியில்தான் (பாற்கடல்) விஷக்கடி நிவர்த்தியாக நீராடி மூலிகை வேர் ரட்சை கட்டப்படுகின்றது.
முற்காலத்தில் மூவாயிரக்கணக்கான மூலிகை புஷ்பச்செடி கொடிகளுடன் நறுமண புஷ்ப சக்திகளுடன் தொடங்கிய இத்தலத்தில் மூலிகை புஷ்பங்கள் நிறைந்து இருந்த காரணத்தால் பூக்களை எடுத்துச் செல்ல சித்தர்கள், மகரிஷிகள், காந்தவர்களின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது.
காசித்தும்பை போன்று புஷ்பகாசி என்ற அரியமூலிகை புஷ்பம் இங்கு விளைந்த காரணத்தால் இத்தலத்திற்கு புஷ்பகாசி என்ற பெயரும் உண்டு. காசிக்கு இணையான தலங்களிலும் காசியின் பெயரை கொண்டுள்ள தலங்களிலும் காஸ்ய மாமுனிவர் தன் தவத்தின் ஊடே வந்து செல்வார் என்பது ஐதீகம்.
புஷ்பகாசி தேவதைகள் புஷ்பங்களை பூவனூரில் இருந்து எடுத்து சென்றுள்ளன. எண்ணற்ற தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த பூவனூரில் அரிய மூலிகை புஷ்பகதிர்சக்தி நிறைந்துள்ளதால்,
ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) இங்கு தங்கி வழிபடுவதும், தீர்த்தங்களில் புனித நீராடுதலும், பிராணயாமம் ஆற்றுதலும், ஆழ்தலும், ஆழ்ந்து சுவாசித்தலும் சிறந்த யோக சக்திகளை, நல்வரங்களை தருவதாம். உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு ஐந்துமே மிகத்தூய்மை பெறும். .
சுக முனிவர் வணங்கிய திருத்தலம்.











