ஒருமுறைசிவனடியார்ஆகிப்பார்
☘☘☘☘☘☘☘☘
எவனோ ஒருவனுக்கு அடிமையாகியே தீர வேண்டும் என்பது மனித குலத்திற்கான விதி! – அது சிவனுக்காயிருந்தால்….
எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. ஆனால்
தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்!
☘
எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை. ஆனால்
சித்தமலம் அறுவித்து சிவமாக்கும் தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்!
☘
எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே
தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை . ஆனால்
பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள் செய்யும் தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்!
☘
தோழமையின் பொருட்டு தூது சென்றவனும். பிட்டிற்காய் மண் சுமந்து பிரம்படி பட்டவனும். ஏன் இவ்வுலக உயிர்கள் இன்புற வாழ
வேண்டி கொடிய நஞ்சுதனைத் தானுண்டு இன்று வரை அதை தன் கண்டத்தில் சுமப்பவனுமான பெருங்கருணையாளன்
சிவபெருமானே!
☘
– அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
சாதி, குலம் எனும் சுழிப்பட்டுத்திரியும் அவல நிலை நீங்கி. சிவக்கோலமே சிவமெனக்கருதி அடியார்க்கு அடியாராய் சிவ
குடும்பங்களாய் அன்புசெய்து வாழும் அடியார் திருக்கூட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
வெற்றித் திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு.. ஒருமுறை சிவனடியார்
ஆகிப்பார்…
☘
எத்தனை பெரிய கண்டம் தோன்றிடினும் உனை வந்து அண்டாமல் காக்கும் நீ அணிந்திருக்கும் கண்டமணி உருத்திராக்கம்..
ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
21 தலைமுறையை நரகத்தில் வீழாது காக்கும் நீ படிக்கும் திருவாசகம்.. ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
துன்பங்களைக்கண்டு நீ ஓடிய காலம் போய். துன்பங்கள் உன்னைக்கண்டு ஓடும் நீ ஓதும் திருவைந்தெழுத்தைக்கேட்டு சிவாயநம!.. ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
☘
• அறியாமை விலகும்
• ஆனந்தம் பெருகும்
• இருள் அகலும்
• ஈசனருள் பெருகும்
• உண்மை விளங்கும்
• ஊழ்வினை துலங்கும்
• எப்போதும் மலர்ந்திருப்பாய்
• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்
• ஐம்பூதங்களும் உன்வசமாகும்
• ஒருவன் என்னும் ஒருவன் வருவான்
• ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான்
• ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்
சவமாக வேண்டிய நீ சிவமாவாய் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்.











