சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமையகத்தில் ஒரு புத்தக விற்பனை நிலையம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏற்கனவே பல கோவில்கள் தனியாக புத்தகங்களை வெளியிடுகின்றன. தவிர, திருக்கோவில் என்ற மாத இதழும் வெளிவருகிறது.
ஆனால், இந்தப் பத்தகங்கள், அந்தந்தக் கோவில்களுக்குச் செல்லும்போதுதான் வாங்கும் நிலை இருந்தது. எந்தக் கோவில் எந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது என்பதும் அங்கே சென்றால்தான் தெரியும்.
இந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறையே நேரடியாக புத்தகங்களை பெரிய அளவில் வெளியிட்டுள்ளது.
திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களின் மறுபதிப்பு, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
புத்தகங்கள் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு.
புத்தகங்களின் தயாரிப்புத் தரமும் அச்சுத் தரமும் டைட்டில்கள் தேர்வும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட, கோவில்கள் மீது ஆர்வமும் பிடிப்பும் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த விற்பனை நிலையத்திற்குச் சென்று பாருங்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தின் தரைத் தளத்தில் இந்த விற்பனை நிலையம் இயங்கிவருகிறது.
இதைச் சாத்தியமாக்கிய அமைச்சர் சேகர் பாபுவும் ஆணையர் குமரகுருபரனும் பாராட்டுக்குரியவர்கள்.











