மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார்:
இவர் திருவாமூரில் வளோளர் குடியில் பிறந்தார்.தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். இவரது பிள்ளைத் திருநாமம் “மருள்நீக்கியார்” என்பதாகும். இளமையில் பெற்றோரை இழந்த மருள் நீக்கியாரைத் தமக்கை திலகவதியார் அன்போடு வளர்த்தார்.
சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களை நன்கு பயின்றார்.
இதையெல்லாம் அவரது தமக்கையார் கொஞ்சமேனும் விரும்பவில்லை. தம்பியார் மீண்டும் சைவநெறிக்கு வரவேண்டும் என விரும்பினார்.
வயிற்றுவலியால் துன்புறல்
திருவருளால் மருள் நீக்கியாருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சூலை நோய் எனப்பட்ட அந்த வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். குடைந்து குடைந்து நோயின் கொடுமை கூடியது. என்ன செய்வார்?
தமக்கையாரே தஞ்சமென்று திலவதியாரிடம் சென்றார். நோயின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அழுது கேட்டார்.
திலகவதியார் தம்பியாரை வீரட்டானேசுவரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றை அள்ளிக் கொடுத்தார்.
“தம்பி! இறைவனிடம் உன் குறையைச் சொல்லு”, என்றார். அழுதும் தொழுதும் நின்ற மருள்நீக்கியார் தம்மை அறியாது பாடினார். என்ன பாடினார்?. . “வீரட்டானத்து அம்மானே! யமன் போன்ற இந்த நோயை அகற்றிவிடும்.
முறுக்கி முடக்கி என்னைத் துன்புறுத்துகிறது. என்னால் தாங்க முடியவில்லையே! அறியாமல் பிழை செய்தேன். இரவும் பகலும் உம்மை வணங்குவேன். இந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்!” என்றவாறு கொல்லிப் பண்ணில் தேவாரம் பாடினார்.
இதோ! இவர் பாடிய முதல் தேவாரப் பாடல்:
கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
கொடுமை பல செய்தன நானறியேன்,
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களைப் பாடி முடித்தார். சூலை நோய் தானாக அகன்றது. இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் “நாவுக்கரசர்” என்றழைக்கப்பட்டார். நாவுக்கரசரும் சிவநெறி நின்று மகிழ்ந்தார்.
சமணர்கள் கோபத்தால் வெகுண்டு எழுந்தனர். சமண சமயத்தை விட்டுச் சென்ற நாவுக்கரசரைத் தண்டிக்க முயன்றனர். நாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் நாவுக்கரசர் பற்றிக் கோள் சொன்னார்கள். மன்னன் சமண சமயச் சார்புடையவன். எனவே நாவுக்கரசரைத் தண்டித்தான்.
சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். சிவபெருமானின் இணையற்ற திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச் சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை.
அவருக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும் தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.
சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
நாவுக்கரசரைக் கல்லோடு கயிற்றால் கட்டினார்கள். ஆழ்கடலில் வீசி எறிந்தார்கள். எமக்குத் துணை ஐந்தெழுத்தாகிய “நமசிவாய” என்று துதித்தார் நாவுக்கரசர்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே
இவ்வாறு தொடங்கும் நமசிவாயப் பதிகப் பாடல்களைப் பாடி முடித்தார். சமணர்கள் கொடுமைகளிலிருந்து விலகினார் நாவுக்கரசர்.
அற்புதங்கள்
*சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
*வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
*விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது
*காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.
அப்பர் அமைத்த – “திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்” என்று புகழப்படும் திருமடம் உள்ள திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயதலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்றெண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி
வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சித்
தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.
திருக்கயிலையை தரிசித்த பலன் கிடைக்க தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி கோவில்
சென்று வாருங்கள். தீப எண்ணெய்க்கு வழி இன்றி இருப்பது மனதிற்கு கஷ்டமாக
உள்ளது.











