சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார்.
இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார். சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது.
சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும்.
சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது.
அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.
பழனிக்கும் தைப்பூசத்திற்கும் என்ன தொடர்பு?
பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், கைலாச நாதருடன் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறாள். இக்கோவிலில் சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது.
கோவிலின் பிரதான தெய்வமாக பெரியநாயகி அம்மனும், சிவனும் இருந்தாலும், பிரதான வாசல் மற்றும் கொடிமரம் ஆகியன முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளன.
கோவிலுக்குள் வரும் போது முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும்.
முருகனுக்குரிய நாளாக மாறியது :
காலப் போக்கில் இக்கோவிலின் பிரதான தெய்வமாக முருகனே மாறினார். தைப்பூச விழாவிற்கான கொடி, முருகன் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்திலேயே ஏற்றப்படுகிறது. இதனால் தைப்பூச விழாவும் முருகப் பெருமானுக்கு உரிய விழாவாக மாறிப் போனது.
தற்போதும் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோவிலேயே நடத்தப்படுகிறது. தைப்பூச விழாவின் ஏழாம் நாளில் நடக்கும் தேரோட்டமும் இக்கோவிலில் இருந்தே புறப்பட்டு வீதி உலா வரும்.
இதே போல் பழனி மலைக் கோவிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியும், அபிஷேகப்பிரியராக சிவனின் அம்சமாகவே திகழ்கிறார். இங்கு முருகனுக்கு தினமும் 6 முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடத்தப்படுகிறது.
அதோடு, அசுரர்களை வதம் செய்வதற்காக பழனி மலை முருகனின் பராசக்தி, சக்திவேலை அளித்த நாள் இந்த தைப்பூச நாளாகும். சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது என்கின்றன புராணங்கள்.











