காட்டுப் பாதையில், காய்ந்த விறகுகளைத் தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தான் ஒருவன். வழியில், மரத்தடியில் நரி ஒன்று படுத்திருந்தது. அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டுமே இல்லை.
“ஐயோ பாவம் இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லையே. இதனால் உணவு தேட முடியாதே. கால் இல்லாத நரிக்கு இங்கு யார் உணவு தருவார்கள்?” வாய் விட்டுப் புலம்பினான்.
“கவலை வேண்டாம். கடவுள் காப்பாற்றுவார்” என்று சொல்லிவிட்டு போனார், அந்த வழியே சென்ற பெரியவர் ஒருவர்.
எப்படிக் காப்பாற்றுவார்? அதையும் பார்ப்போமே. என்று அங்கேயே நெடுநேரம் காத்திருந்தான்.
அப்போது, சிங்கம் ஒன்று மானை அடித்து இழு த்து வந்து அங்கு போட்டது. மானை பாதியள வே சாப்பிட்ட சிங்கம் மீதியை அங்கேயே போட்டு விட்டுச் சென்றது. இதைக் கண்ட நரி, மெள்ள நகர்ந்து சென்று அங்கே கிடந்த மிச்ச சொச்ச மாமிசத்தை சாப்பிட்டது.
இவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொ ண்டிருந்த ஆசாமி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
‘இரண்டு கால்களும் இல்லாத இந்த வயசான நரிக்கே உணவு கொடுக்கும் இறைவன், தின மும் கோயிலுக்குச் சென்று வழிபடும் நமக்கு உணவு தர மாட்டானா? நிச்சயம் தருவான். எனவே, இனி வெயில்-மழை என்று ஏன் கஷ்ட ப்பட வேண்டும்?’ என்று சிந்தித்தான்.
இதையடுத்து வேலை செய்வதை அடியோடு நிறுத்திக் கொண்டான். கோயிலுக்குச் சென்று மண்டபத் தூணில் சாய்ந்து அமர்ந்தான்; ஆண் டவனே கதி என்று கிடந்தான். ‘கடவுள் நமக்கு ஏதேனும் தருவார்’ என்று காத்திருந்தான்.
ஆனால், அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்க வில்லை. நாளுக்கு நாள் பசியால் வாடி போய், உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தான். ஓர் அடி எடுத்து வைக்கவும் உடலில் தெம்பு இல்லாத நிலை!
ஒரு நாள், நள்ளிரவு நேரம் மெள்ள கண்களை திறந்து பார்த்தான். கோயிலில் எவரும் இல்லை. கடவுளைத் தவிர. “கடவுளே! எனது பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா? கால் இல்லாத நரிக்கு கூட சிங்கத்தின் மூலம் உணவு வழங்கினாய். அதையே பாடமாக எடுத்துக் கொண்டுதானே இங்கு வந்து கிடக்கிறேன். எனக்கு ஏதும் தரமாட்டாயா?” என்று சந்நிதியைப் பார்த்துக் கதறினான்.
இப்போது கடவுள் பேசினார் “மகனே! நரியிடம் இருந்து உன்னை யார் பாடம் கற்கச் சொன்னார்கள் ? நீ சிங்கத்திடமிருந்தல்லவா பாடம் ஏற்றிருக்க வேண்டும் ?”
நண்பர்களே! கடவுளை வணங்கும்போது, நமக்கு யாராவது உதவுவார்களா ? என்று எண்ணாதீர்கள். நம்மால் யாருக்கேனும் உதவ முடியுமா? என்று எண்ணுங்கள். ஏனெனில், அதுவே ஆன்மிகம்.











