அண்ணல் காந்தியாரின் 77ஆவது நினைவு நாள் இன்று (சனவரி 30).
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் நடத்தி வெற்றிகண்ட அவரைப்போன்ற உத்தமர் ஒருவரை இப்புவி யாங்கணுமே கண்டதில்லை. பின்னாளில் அமெரிக்க காந்தி எனும் சிறப்பினைப் பெற்ற மார்டின் லூதர் கிங் இளையவர் (Martin Luther King Jr.), நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நிகழ்த்திய போரில் வன்முறையைக் கைக்கொள்ளாது அறவழியைக் கைக்கொண்டமைக்குக் காந்தியாரைத் தாம் வழிகாட்டியாகக் கொண்டமையே காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
கிரேக்கத் தத்துவ அறிஞர் சாக்ரடீஸின்மீது ஈடுபாடு கொண்டிருந்த காந்தியார், தம் கொள்கைக்காக எவ்விதச் சமரசமும் இன்றிக் கடைசிவரைப் போராடி உயிர்நீத்த சாக்ரடீஸை “சத்திய வீரர்” (Soldier of Truth) என்றழைத்தார்.
காந்தியாரைப் பொறுத்தவரை ’சத்தியாகிரகம்’ (the force of truth) என்பது வாய்மையைக் கடைப்பிடிப்பதும், அதன்பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொள்வதும் மட்டுமல்ல; அதற்காக ஒருவன் தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதாகும்.
அந்த அடிப்படையிலேயே ”செய் அல்லது செத்துமடி (Do or Die/We shall either free India or die in the attempt) என்பதை ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கமாக 1942-இல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் எழுப்பினார். ”சுதந்திரம் என்பது வீரர்களுக்குரியது; அது கோழைகளுக்கும் பயங்கொள்ளிகளுக்கும் உரியதன்று!” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தம்முடலில் உயிரிருந்தவரை பிற உயிர்களுக்கு ஊறுசெய்யாது, வாய்மை தவறாது, நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அகிம்சாமூர்த்தியான அண்ணல் காந்தியார், தம் சொந்த நாட்டில் மற்றோர் இந்தியனாலேயே கொடூரமாய்க் கொல்லப்பட்டமை அவலத்தின் உச்சம்! 😢
சூழ்நிலைக்குத் தக்கபடி தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளே (timeservers) இவ்வுலகில் ஆபத்தின்றி வாழ முடிகின்றது; மாறாக, உயர்ந்த கொள்கைகளும் அதில் உறுதியான பற்றுதலும் கொண்டோரின் வாழ்வு இன்னல்கள் நிறைந்ததாகவும் துன்ப முடிவு கொண்டதாகவுமே இருக்கக் காண்கிறோம்; சாக்ரடீஸ், இயேசுநாதர், அண்ணல் காந்தியார், மார்டின் லூதர் கிங் இளையவர் போன்ற கொள்கைவீரர்கள் பலரின் ஈகவாழ்வு இதற்குச் சான்றாய் அமைந்திருக்கின்றது.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு, பாழ்பட்டு நின்ற எம் பாரத தேசத்தை வாழ்வித்த அண்ணலே உம் புகழ் ஓங்குக!











