“மனிதனுக்கு முன் நிலையில் உள்ள விலங்குகளிடமும் பிராணிகளிடமும் கூடக் கோபம் என்னும் குணம் உண்டு என்பதை அறியமுடியும். இந்தக் கோபம் கருவின் தொடர்பால் மனிதரிடத்தில் சமய சந்தர்ப்பங்களால் கூடியும் குறைந்தும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கோபம் சிறு குழந்தைக்குக் கூட வருகின்றது.
கரு அமைப்பால் உருவமும் அறிவும் அறிவானது நிலைமாறி அடையும் குணங்களும் கூட அதே கருவமைப்பால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. இதை மாற்றியமைக்க மனதிற்கு ஒரு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) இன்றியமையாதது.
சினத்தை ஒழிக்க நடைமுறையில் வெற்றியடையத்தக்க ஒரு பயிற்சி திட்டம் மனவளக்கலையில் உள்ளது.
தற்சோதனை (Introspection),
குண நல மேன்மை (Sublimation),
முழுமைப் பேறு (Perfection)
இவற்றை அடக்கமாகக் கொண்டதால் குண்டலினியோகம் கற்று மனம் ஒடுங்கி ஒடுங்கி தவமியற்றிப் பழகிய பின்னர்தான் இந்தச் சினத்தை வெல்லும் திறன் மனதிற்குக் கிட்டும். அதனால்தான் ஆறுகுணச் சீரமைப்பையும் துரியாதீத தவத்தையும் நாம் ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறோம். இறைநிலையோடு கலந்து பழகித் தவமியற்ற தவம் இயற்றத்தான் சட்டென்று விரிந்து சினமாக மாறாத தகைமை மனதிற்கு கிடைக்கும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“சினத்தை ஒழிக்க சித்தர்கள் எழுதிய கவிகளில்
எடுத்துக்காட்டாக சில:
“சினம் மாண்டுபோக அருள் சேர்ந்திருப்ப தெக்காலம்” – பத்திரகிரியார்.
“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்”. – திருவள்ளுவர்.
“அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்” – அருட்பிரகாசவள்ளலார்.
“சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே” — இடைக்காட்டுச் சித்தர்.
“நாணத்தை கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போதே சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின்சொல்வேன்;சினத்தை முன்னே
வென்றிடுவீர்’ மேதினியில் மரணமில்லை” – மகாகவி பாரதியார்.
“கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய் தந்தை
கோபமே குடி கெடுக்கும்,
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது
கோபமே துயர் கொடுக்கும் .
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு
கோபமே உறவ றுக்கும்
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவனாக்கும்.– சதுரகிரியார்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.










