பேசும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தி – ஶ்ரீ அன்னை
வார்த்தைகளை விரயம் செய்யாமல் எது தேவையோ, எது நல்லதோ அதை மட்டுமே கூற வேண்டும்.
ஏனென்றால் நாம் பேசும் வார்த்தைகளுக்குஒரு சக்தி இருக்கிறது என்கிறார் ஶ்ரீ அன்னை.
வார்த்தைகளின் பின்னால் ஓர் ஆன்மீக சக்தி செயற்படுகிறது. நாம் இந்த சக்தியோடு தொடர்பு பூண்டால், அதன் பலனை உணரலாம்.
இறைவனிடம் இறைஞ்சி விண்ணப்பம் செய்யும் பொழுது அவ்விண்ணப்பத்திற்கு ஒரு விடை கிடைக்கிறது; இல்லாவிட்டால் ஒரு பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கிறது.
இது ஒரு வார்த்தை தான். இந்த வார்த்தையின் சப்தமே, ஒலியே, கருத்து மட்டும் அன்று, ஒலியே படைக்கும் சக்தி, வேண்டியதை ஆக்கும் சக்தி கொண்டது.
இதுவே மந்திரத்தின் மூலம். இந்த வார்த்தைகள் மந்திரங்களாகி அதிர்வு அலைகளைப் படைக்கிறது.
நாம் நினைப்பதைவிட இந்த அதிர்வலைகளுக்கு மிகுந்த சக்தி உண்டு. நிச்சயமாக இவை மறுக்க முடியாத விளைவுகளை உண்டாக்கும்.
நல்லெண்ணத் தோடு, நல்ல மனத்தோடு, நல்ல உணர்வோடு நல்ல வார்த்தைகளைக்கூறினால், அதன் சக்தி பல நன்மைகளை உண்டாக்கும்.
தீய எண்ணத்தோடு, தீய மனத்தோடு, தீய உணர்வோடு சாபங்களை இட்டால் அதுவும் பலித்துவிடும்.
ஒருவன் கோபாவேசத்தில் கெட்ட வார்த்தைகளைக்கூறி சாபமிட்டால், இது யார் மீது சாபமிடுகிறானோ அவனை பாதிக்கும் என்கிறார் ஶ்ரீ அன்னை.
ஆகையால் சாபமிடுவதையும் திட்டுவதையும் தவிர்த்து நன்மை விளையும் நல்ல வார்த்தைகளைக் கூறுவதே அன்னை வழி நிற்பவர் கடமை.
வெறும் வாய் வார்த்தையாக வராமல் நல்ல சொல் இதயபூர்வமாக, ஆர்வத்துடன், உணர்வுபூர்வமாக வர வேண்டும். அப்போது தான் அதற்கு சக்தி பெருகும்.
உதாரணத்திற்கு “நல்வாழ்த்துக்கள், நீடுழி வாழ்க, மிக்க மகிழ்ச்சி, எல்லா நலன்களும் உண்டாகட்டும், இந்த நாள் நல்ல நாளாக இருக்கட்டும்”, இது போன்ற வற்றை வெறும் வாய் வார்த்தையாக, சம்பிரதாயமாகக் கூறாமல்,
உங்கள் மனப்பூர்வமான இச்சையுடன், எந்திர இயக்கமாக கூறாமல், இதயக்கனிவுடன், ஆர்வ எழுச்சியுடன் கூறினால் அதன் சக்தி அளவிடற்கரியது.*
ஆகையால் நாம் சொற்களைக் கூறும் பொழுது பெரிதும் கட்டுபாட்டுடன், கூற வேண்டும்.
இல்லாவிட்டால் நம்மை அறியாமலே, நாம் விரும்பாமலேயே கூட, அறியாமையால்பெருந் தீங்குகளை விளைவித்து விடும்.
எனவே நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக கவனமாக வார்த்தைகளை எண்ணிப் பேச வேண்டும்.
-ஶ்ரீ அன்னை.










