குரு அக்கா சாமி வாழ்க்கை வரலாறு
சிறு வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கை நடத்தி வந்தார். மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு விட்டு,தான் களிமண்ணால் செய்த பிள்ளையாருக்கு, பூக்கள் தொடுத்து மாலை அணிவித்து பூஜை செய்வார். எப்போதும் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து மகிழ்வார்.
அதுசமயம் ஒரு பெண் சிறுவன் வணங்கிய மண்பிள்ளையாரை வணங்கினாள். சிறுவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.தன் கையால் செய்து, தான் வணங்கி வரும் பிள்ளையாரை ஒரு பெண்ணும் வணங்குவதைக் கண்ட மகிழ்ச்சி பொங்க அந்த பெண்ணின் கையை பிடித்து முத்தம் கொடுத்து விட்டார்.
அப்பெண் கோபம் கொண்டு “உன் அக்கா வயதிருக்கும் என் கையை பிடித்து-முத்தம் கொடுக்கிறாயா ? “ என்று கோபித்து கடுமையாக பேசி விட்டு சென்று விட்டாள். அப்பெண் பேசியதை சிறுவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதையே நினைத்து நினைத்து வருந்தினார்.
பெண் இன்பத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதற்காக வேண்டி எல்லா பெண்களையும் தன் சகோதரிகளாக கருதினார். எந்த பெண்ணைக் கண்டாலும் “ அக்கா” “அக்கா” என்றே கூப்பிடுவார்.
அதனால் எல்லோரும் இவரை “அக்கா சாமியார்” என்றும் “அக்கா பரதேசி சாமியார் “ என்றும் “அக்கா சித்தர் ” என்றும் பலவாறு அழைத்து வந்தனர். கடைசியில் “குரு அக்கா சுவாமிகள்” என்ற பெயரே நிலைத்து விட்டது.











