சிந்தனையில் உயர்ந்து – நம்மை நாம் நம்ப வேண்டும்..!!
ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல! நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள்.
ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி விடுவது சுலபம். அதனை ஆக்க பூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.
ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.
முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.
கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும்.
நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.
எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக் குறுகிவிடவில்லை.
எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.
பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை.
அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார்.
தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால் தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து இருக்கின்றன.
உள்ளத்தின் உயர்வு, உலகத்தின் பெரு மதிப்பு..
கல்கண்டு பத்திரிக்கை ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் தன்னைத் தானே உயர்வாக போற்றிக் கொண்டார். தன்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டு கூட புகழ்ந்து கொள்வது அவருடைய இயல்பாக இருந்தது.
இந்த புகழுரையே அவருக்கு மேன் மேலும் வெற்றியைத் தேடித் தந்தது. அவர் போட்டுக் கொண்ட அடைமொழிகளும், புகழுரைகளும் ஏராளம்.
ஆங்கில மொழி நூல்களை எழுதிய எழுத்தாளரைப் போல அட்டை படத்தில் தன்னுடைய போட்டோ வெளியிட்டு புதுமுறையை உருவாக்கினார். தன்னுடைய புகைப்படத்தை அட்டையில் முதன்முதலாக வெளியிட்டார்.
இவருடைய போட்டோ தான் புத்தக அட்டையில் காட்சி அளிக்குமே தவிர ஓவியம் அதில் இடம் பெறாது. சுயமுன்னேற்ற நூல்களில் தன்னுடைய படத்தை வெளியிட்டு எல்லோருடைய மனதிலும் ஒரு விதமான கம்பீரத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார்.
மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பட்டப்பெயர்களைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டிய போது இவர் மட்டும் துணிவுடன் செயல்பட்டு அடைமொழிகளுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து வெளியிட்டார்.
தத்துவ மேதை, அச்சம் போக்கும் அறிஞர் புரட்சி எழுத்தாளர் பல்கலை வித்தகர் இதுபோன்ற இன்னும் பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு தான் அவருடைய நூல்கள் அமைந்திருக்கும்.
தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு செயலாற்றினார். அவருக்கு துணிவு அதிகம் இருந்தது. எழுதுவது உயர்வான பணி என்று எண்ணி அதனை பலரும் ஒப்புக் கொள்ளும்படி செய்து பணக்காரராக வாழ்ந்து காட்டினார்.
மற்றவர்களைப் போல எழுத்துலகிற்கு வந்துவிட்டோமே என்று அங்கலாய்க்காமல், அதனையே சிறப்பாக நினைத்து நூல் எழுதி பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.
இவரைப் போலவே நாமும் சிந்தனையில் உயர்ந்து நம்மை நாமே மேன்மை படுத்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.











