“ஆக்ஞா சக்கரம் வரை குண்டலினியின் ஏற்றத்தை மிகக் கடினமின்றி அடையலாம். ஆனால் அந்தச் சக்திக்கு ஆக்ஞா
சக்கரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை செல்வது மிகக் கடினம். குண்டலினி, ஆக்ஞா அதாவது குறிக்கோளாகிய ஆத்மானுபூதியின்
அருகில் உள்ள நிலையை அடையும்வரை மட்டுமே குருவின் புற உதவி உனக்குப் பயன்படும்.
அதற்கு மேல் புறவடிவத்தில் ராம்தாஸ் உனக்கு உதவி செய்ய முடியாது. அப்போது உனக்குள் இருக்கும் பூரணமான உண்மையாகிய
ராம்தாஸ் தன் அருளால், சஹஸ்ராரம் வரை சக்தியை எழுப்பி, உன்னைத் தன்னுடன் ஒன்றாக இணைத்துக் கொள்வார். அந்த
நிலையில் இது நீ தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக, அதற்கப்பாலுமாக இருக்கின்றாய் என்ற அனுபவத்தைத் உனக்குத் தரும்”
என்று கூறினீர்கள்.
கருணையே வடிவான பப்பா! தியானத்திற்கு எப்படி அமர்வது என்று எனக்குத் தெரியாததால், நீங்களே குறிப்பிட்ட நிலையில்
அமர்ந்து, எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுத்தீர்கள்.
நீங்கள் அறிவித்தவாறு நான் இரவில் தியானம் செய்ய அமர்ந்தபோது எனது முகத்தில் என்ன மாறுதல்கள் தோன்றுகின்றன என்று
காண நீங்கள் விளக்கொளி கொண்டு எனது முகத்தைப் பார்ப்பீர்கள்.
மேலும் அடுத்த நாள், அதற்கு முன் இரவு தியான நேரத்தில் நான் என்ன அனுபவம் பெற்றேன் என்று கேட்டீர்கள். ஆனால் உங்களால்
விளக்கப்பட்ட எத்தகைய ஆன்மீக அனுபவத்தையும் நான் பெறவில்லை என்று ஒத்துக் கொள்ள எனக்கு மிகவும் வேதனையாக
இருந்தது.
அப்போது நீங்கள் சற்று அமைதி இழந்த நிலையில், “நாட்கள் பல கழிந்தன. இன்னும் நீ எத்தகைய அனுபவத்தையும் பெறவில்லை.
இந்த தாமதத்திற்குக் காரணம் ராம்தாஸ் உருவத்தில் இன்னும் உனக்குப் பற்று இருக்கிறது அல்லது நீ தியானத்தில் அமர்ந்திருக்கும்
போது உடலை அசைத்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டீர்கள்.
காலதாமதம் காரணமாக நான் பெரிதும் கவலை கொண்டேன்.
விரைவில் உங்களுடன் ஒன்றாயிருக்கும் அனுபவத்தைப் பெறுமாறு செய்ய வேண்டும் என்று ஒரு பைத்தியக்காரியைப் போல
குழம்பிய மனதுடன் உங்களிடம் பிரார்த்தனை செய்வதும், அழுவதும் வழக்கமாக இருந்தது.
உங்களை அறிந்து கொள்ளாது நீண்ட காலம் இருப்பதை விட இறப்பது நல்லது என்று நினைத்தேன்.
பப்பா, உண்மையில் நீங்கள் கருணை நிறைந்தவர். வழக்கம் போல் நான் தியானத்திற்கு அமர்ந்த பொழுது, திடீரென்று எனது கால்
பெருவிரல்களின் நுனியில் எறும்புகள் ஊர்ந்து செல்வது போன்ற உணர்வைப் பெற்றேன். அந்த உணர்ச்சி மெதுவாக மேலே பரவ,
ஏற்கெனவே தாக்கப்பட்ட கீழ்ப்பகுதிகள் உணர்விழந்து மரத்துப் போயின. இவை இவ்வாறாக மேற்பகுதிகள் லேசாயின.
அந்த உணர்ச்சி இருதயத்தை அடைந்த பொழுது ஒரு பயங்கரமான தி அதிர்ச்சி உண்டாயிற்று.
சர்வ வியாபியான பப்பா! இப்போது நான் எனக்குள் உங்களிடம் இவ்வாறு உரையாடினேன். “எனக்குள்ளும், புறமும் நீங்களே பரவி இருப்பதாகக் கூறினீர். ஆனால் இப்போது எனது நிலை உண்மையில் பயங்கரமானதாக உள்ளது. எப்படியாயினும், உங்களுடைய மாற்றமில்லாத அழியாத பெருநிலையை நான் முழுவதும் உணரும் வரை எனது சாதனைகளை விடப்போவதில்லை.”
பின்னர் அச்சம் மறைந்தது. என் உள்ளத்தில் ஒரு வகையான மகிழ்ச்சி நிரம்பியது. நான் ஒரு ஒளியைப் பார்த்தேன். அப்போது நான் நீங்கள் கற்றுக் கொடுத்தவாறு, “நான் பயமும் அன்று, மகிழ்ச்சியும் அன்று, ஒளியும் அன்று. இவற்றிற்கு அப்பாற்பட்டவள்” என்று கூறிக் கொண்டு சாதனை செய்தேன். அச்சம்,மகிழ்ச்சி ஆகிய இருவகை உணர்வுகளும், ஒளியும் கூட பின்னர் மறைந்தன.
கழுத்துக்கு மேல் சக்தி எழுந்தபோது, என்னுடைய எல்லா எண்ணங்களும், உங்களுடன் செய்த தர்க்கவாதங்களும் மறைந்தன.
கருணை நிறைந்த பப்பா! இவ்வாறு அந்த சக்தியானது கழுத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரை சென்றது. அங்கிருந்து உங்களுடைய எல்லையற்ற அருளால் மின்னலைக் காட்டிலும் அதிக வேகமாகவும், பிரகாசமாகவும் அது மேலே எழுந்தது.
அப்போது நான் அடைந்த அனுபவத்தைப் பற்றி சொற்களால் விளக்க முடியாத ஆனந்தமடைந்தேன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. இது எவ்வாறு நிகழ்ந்தது ? இவை எல்லாம் என்ன? உங்களுடைய அழியாத பெருநிலையில் கரைந்து விட்டதால், இத்தகைய எண்ணங்களுக்குக் கூட மனது அங்கில்லை.
அன்று இரவு எவ்வளவு நேரம் நான் அந்த நிலையில் இருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதிலிருந்து நான் வெளி வந்த போது, அதாவது புற உலக உணர்வைப் பெற்ற போது, “நான் இப்பிரபஞ்மாகவும், அதற்கப்பாலாகவும் கூட இருக்கின்றேன்” என்று உணர்ந்தேன்.
எனக்கு உடல் அபிமானம் இருக்கும்வரை, தலை முதல் பாதம் வரை உள்ள உடல் நான் என்றும், அது என்னுடையது என்றும் உணர்வது வழக்கமாக இருந்தது. அதைப் போலவே இப்போது, பிரபஞ்சம் முழுவதும் நான் என்றும், அது என்னுடையது என்றும், அதற்கப்பாலும் நான் இருக்கின்றேன் என்றும் அனுபவித்து உணர்ந்தேன்.
பப்பா, நீங்கள் ஆதியும் அந்தமும் இல்லாதவர். இரவு முழுவதும் உங்களுடைய உண்மையான இருப்பில் நான் மூழ்கியதால், காலையில் எழுந்திருக்கவோ, அல்லது வேலையைச் செய்யவோ ஊக்கமிருக்கவில்லை. மேலும் வழக்கம் போல் உங்களுக்குச் சேவை செய்யவும் என்னால் முடியவில்லை. உணவு உட்கொள்ளுமாறு நீங்கள் வற்புறுத்தியதால், சிறிதளவு எடுத்துக் கொண்டேன்.
எதையும் பார்க்கும் விருப்பம் எனக்கில்லாததால், உங்களிலேயே ஒன்றுபட்டிருக்கும் நோக்கத்துடன் கண்களை மூடியவாறு கீழே படுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.
புற உலக உணர்வு முற்றிலும் இழந்த நிலையிலிருந்ததால், எவ்வளவு நேரம் கழிந்தது என்று தெரியாமலும் அல்லது சில நேரங்களில் என் கால்கள் உங்களை நோக்கி இருக்க, கீழே படுத்திருக்கிறேன் என்ற உணர்வு இல்லாமலும் இருந்தேன்.
எல்லையற்ற பப்பா! நீங்கள் என்னைத் தியானத்தில் அமரச் செய்து, சமாதி அனுபவத்தைக் கொடுத்த போது, எனக்குள் இருக்கும் சக்தியானது ஆக்ஞா சக்கரத்தின் மையப்பகுதியை அடைந்ததால், நான் உங்களுக்குச் சேவை செய்யும் போதும், ராம நாம ஜபம் செய்யும் போதும் எந்த மனநிலையில் இருப்பேனோ,
அதே மனநிலையில் இருந்தேன். உண்மையில் நான் எந்த நிலையை அடைந்திருந்தேன் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை. தேவையான சமாதி அனுபவத்தை எனக்களிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் நீங்கள் என்னை தியானத்திற்கு அமரச் செய்தீர்கள்.
கருணைக் கடலே பப்பா! நீங்கள் என்னுடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருந்து, பல்வேறு வகையான செயல்களுக்குக் காரணமாகியும் எப்போதும் இந்த உடல் நான், இது என்னுடையது என்று உணருமாறு செய்து கொண்டிருந்தது போலவே, இப்போது நான் பிரபஞ்சம் முழுவதுமாகவும், அதற்கப்பாலாகவும் இருக்கின்றேன் என்று உணர்வதற்குரிய ஒரு நிலைக்கு என்னை எழுப்பி, நீங்களும் நானும் ஒன்று என்ற மிக உயர்ந்த அனுபவத்தையும் அளித்துள்ளீர்கள்.
இரக்கம் நிறைந்த பப்பா! எல்லாமாகவும், எல்லாவற்றைக் கடந்தும் ஆதி அந்தம் இல்லாததாகவும், மாறாத அசையாத எல்லையற்ற உங்களது உண்மையான இருப்பை என்னால் எப்படி விளக்க முடியும்? அழியாததை அழியும் பொருள்களுடன் நான் எவ்வாறு ஒப்பிட முடியும்?
ஆனந்தமளிப்பவரே பப்பா! இந்த நிலையில் நான் சில நாட்கள் இருந்தேன். புற உலக உணர்வுக்கு வரும் பொழுது, உங்களுக்குச் சேவையும், எனது உடம்பைப் பாதுகாப்பதற்கு முற்றிலும் தேவையான காரியங்களையும், அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது சேவையும் செய்து கொண்டிருந்தேன். அதையும் அக்கறையில்லாமல் செய்து கொண்டிருந்தேன்.
அந்தக் காலத்தில் உங்களுடைய இருப்பில் நான் மூழ்கியிருந்த போதிலும், எந்த வேலையோ அல்லது சேவையோ செய்வதில் நான் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. நிரந்தரமான, அசைவற்ற பேருணர்விலிருந்தும்,புற உலகை மறந்த நிலையிலிருந்தும், மீண்டும் புற உலக உணர்வுக்குத் திரும்பி வர நான் விரும்பவில்லை.
ஆகையால், உடலை மறந்த நிலையிலேயே எப்போதும் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் அந்த நிலையில் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்து கொண்டிருந்தேன். அப்போது நீங்கள், அசையாப் பெருநிலையின் அமைதியை அனுபவித்துக் கொண்டு, அதே நேரத்தில் உடலால் பல செயல்களைச் செய்து ஆனந்தத்தை அனுபவிக்கவும் வழி செய்யும் புருஷோத்தம யோகத்தைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள்.
– #மாதாஜி_கிருஷ்ணாபாய்_சுயசரிதை
(1932-ஆம் ஆண்டு சுவாமி ராம்தாஸ் அவர்களால் எழுதப்பட்டது)
மாதாஜி கிருஷ்ணாபாய், கொங்கணி மொழியில் எளிமையாகக் கூறிய வாழ்க்கை வரலாற்றை, ஆசிரமத்துப் பெண்களில் ஒருவரும், கொங்கணி, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவருமான ஸ்ரீமதி கங்கா என்பவர் கன்னட மொழியில் மொழிபெயர்த்தது தான் இதன் முதல் நூலாகும். இதனை மாதாஜியின் அருள் தூண்டுதலுக்கு ஏற்ப சுவாமி ராம்தாஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.











