எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் ? மிகுந்த அவசரம் மட்டும் இருக்கிறது.
தெருவழியில் ஒரு மனிதரை நீங்கள் நெருங்கி, ”எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா.” என்று அவரிடம் கேட்கிறீர்கள்.
அதற்கு ‘எனக்குத் தெரியாது” என்கிறார் அவர் “எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?”என்று அவரைக் கேட்கிறீர்கள் அதற்கும் “எனக்கு தெரியாது” என்கிறார் அவர்.
மேலும் என்னைத் தடுக்காதே. நான் அவசரமாகப் போயாக வேண்டும்’ என்கிறார் என்றால் அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் ?
சரியான பைத்தியம் என்றே அவரைக்குறித்து நீங்கள் நினைப்பீர்கள்.
அவர் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கிறீர்கள்.
மேலும் உங்களின் வாழ்க்கை என்று நீங்கள் அழைத்துக் கொள்கிற இந்த மொத்த அலைக்கழிப்பும் உங்களை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை.
இது ஒரு பைத்தியக்காரத்தனமான விவகாரமாக இருக்கிறது.
உங்களின் தேவைக்கும்மேல் நீங்கள் உழைக்கிறீர்கள். அதிகப்படியாக வேலை செய்கிறீர்கள் ஓடிச்சாடுகிறீர்கள்.
வாழ்க்கை முழுவதும் போராடுகிறீர்கள் – ஆனால் எங்கும் போய்ச் சேர்வதில்லை.
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எங்கேபோய்க்கொண்டிருக்கிறீர்கள், எதை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது.
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் பின் எதற்கு அவசரம்?
ஆனால் இதுதான் ஒவ்வொருவரின் நிலவரமும் ஆக இருக்கிறது.
மூலாதாரத்தைத், தோற்றிடத்தைப்பற்றிய அறிவு உங்களுக்கு இல்லை. இலக்கைப்பற்றிய பிரக்ஞை இல்லை.
ஆனால் மிகுந்த அவசரம் மட்டும் இருக்கிறது.
இந்த அவசரத்தில் நீங்கள் அடையப்போவது எதுவுமே இல்லை. நீங்கள் அடைந்திருப்பதாக நினைப்பதை இழக்கப்போவதை தவிர.
சேராத இடத்தைப் போய்ச் சேருவதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இது என்ன விதமான மனநலம் ? மேலும் இந்தப் போராட்டம் முழுவதிலும் இருந்தும் மகிழ்ச்சியின் சிறு திவலைகள்கூட சிறு கீற்றுகள்கூட உங்களுக்கு வருவதில்லை.
மேலும் மேலும் ஓய்வற்ற நிலையும், கவலைகளும், துக்கமும் நிறைந்ததாகவே உள்ளது.
என்றோ ஒருநாள், நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது செத்தபின் ஏதாவது ஒரு மகிழ்ச்சி நிறைவு உங்களை எதிர்பார்த்து உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. அது ஒரு மனதில் தந்திரம் தான்.
இது வெறும் தந்திரம் மட்டுமே. இந்தக் கணத்தில் ஆனந்தமாக இருக்க முடியும் என்பதை உணராமல் இருப்பதற்கான மனதின் சூழ்ச்சி மட்டுமே இது.
ஓடுவதை நிறுத்துங்கள். எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். ஆனந்த ஒளியின் கீற்று நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தான் உள்ளது.











