“முதலியாரும் நண்பரும் செளகர்யமாக வீடு போய்ச் சேர்ந்தார்களா” – பெரியவா
சூளூர்பேட்டையில் முகாம் செய்திருந்த மஹானை தரிசிக்க, தான் வாங்கி இருந்த புதிய காரில் கிருஷ்ணானந்தத்துடன் முதலியார் சென்றார். தரிசனம் செய்ததும் உடனே சென்னை திரும்ப உத்தேசித்திருந்தார்கள். காலை 9 மணிக்குள் மஹானை தரிசனம் செய்துவிட்டு புறப்பட உத்தரவு கேட்டார்கள்.
பெரியவா “இப்பொழுது போக வேண்டாம், பிற்பகல் போகலாம்” என்று நிறுத்தி விட்டார். முதலியாருக்கோ சென்னையில் அவசர வேலை இருந்ததால் தவிப்பு. எனினும் குரு ஆணையை மீறமுடியாததால் அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பிவந்து பகல் 3 மணிக்கு மஹானிடம் உத்தரவு கேட்டார்.
அவர் ப்ரசாதம் கொடுத்து விட்டு “நீயே வண்டியை ஓட்டுகிறாயா, ஜாக்கிரதையாகப் போய்வா” என அறிவுரையும் வழங்கினார். சிறு தூறல் வேறு ஆரம்பமானதால் வண்டியை சற்று வேகமாகவே முதலியார் ஓட்டி வந்தார்.
எர்னாவூர் இரயில்வே கேட் அருகே ஒரு திருப்பத்தில் வண்டி கட்டுப்பாடு தவறி, ஒரு இரும்புக்கம்பத்தில் மோதி நின்றது. உள்ளிருந்த முதலியார் மற்றும் கிருஷ்ணானந்தத்திற்கு அடிபட்டது. வண்டி ஒரு அடிகூட நகரவில்லை.
பிறகு தனக்கும் நண்பருக்கும் ஏதோ முதலுதவி செய்து கொண்டு முதலியார் முதலில் வீட்டுக்கு வந்துவிட்டார். நண்பர் ஒரு லாரியில் வண்டியை கட்டி இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.
இருவரும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன திருப்தியில் இருந்தனர்.
பெரியவா மறுதினம் மாலை முதலியாரும் நண்பரும் செளகர்யமாக வீடு போய்ச் சேர்ந்தனரா என்று ஃபோன் செய்து விசாரிக்கும் படி மடத்தில் கூற, அவர்களும் விசாரித்து நடந்ததை கூறினார்கள். நடமாடும் தெய்வம் புன்னகைத்து ஆசி வழங்கியது.
பிறகு விசாரித்த அன்பர் சொன்னார் “காலையிலேயே புறப்பட்டிருந்தால்
பெரிய ஆபத்து வந்திருக்கும். பெரியவா விதிப்படி நடப்பதைத் தடுக்கட மாட்டார். எனினும் கஷ்டம் குறைவாக இருக்கட்டும் என்றே பிற்பகல் போக அனுமதித்தார்” என்று கூற இருவரும் மஹானின் கருணையை எண்ணி மகிழ்ந்தனர்.










