ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற வரமாகக் கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான்.
சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தான். கண்ணன் மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில்,
அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.











