அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்:
வாமனனாய், திரிவிக்கிரமனாய் வளர்ந்த வாசுதேவனின் பெருமையை போற்றுகிறாள் ஆண்டாள். தேவர்களைக் காக்க, வானிலும் மண்ணிலும் தர்ம இராஜ்யம் ஸ்தாபிக்க, வாமனனாய் அவதரித்து மூவுலகையும் தன் சேவடியால் அளந்த பிரானே,
உன் பாதம் போற்றி போற்றி. ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். கண்ணன் மூன்றாம் மாதத்தில் குப்புற கவிழ்ந்த நாளில் மங்கல நீராட்டிப் புத்தாடை அணிவித்துப் பால் புகட்டி,
ஒரு கட்டை வண்டியின் அடியில் நிழலாகச் சயனிக்க விட்டுவிட்டு, யசோதை தன் காரியங்களைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். பச்சிளங்குழந்தை தன் கைகால்களை உதைத்துக் கொள்ளுமல்லவா, அதுபோலவே தானும் செய்தது ஆனால் அந்தப் பொல்லாத குழந்தையின் திருவடிபட்டு, மேலே இருந்த சகடம் மளமளவென முறிந்தது.
அந்த வடிவம் கொண்டிருந்த சகடாசுரன் தன் உடல்விடுத்துப் பரமாத்மனின் பாததீக்ஷை பெற்றதால் முக்தியடைந்தான் அத்தகைய உன் புகழுக்கு நமஸ்காரம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம்.
எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம் என்று ஆயர்பாடி பெண்கள் வேண்டுகின்றனர்











