மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன் கண்ணன்.
இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் தழும்பு ஏற்பட்டது. தாமோதரன் என்ற பெயரை தாங்கிய கண்ணபிரானைத், தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது நற்குணங்களைப் போற்றிப் பாடி,
சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், முன்னர் நாம் அறிந்து செய்த பாவங்களும், இனிமேல் நாம் அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் ! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.











