“மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே. இந்த அற்புதத்தைத் தான் மனவளக்கலை பயிற்சியாகிய குண்டலினி யோகத்தில் (Simplified Kundalini Yoga) சாதிக்கின்றோம்.
மனவளக்கலை வெறும் யோகம் மட்டும் இல்லை. மனம் என்றால் என்ன? மனத்தின் மகத்துவம் என்ன? மனமாக இருப்பது எது? எனத் தெரிந்து கொள்கிறோம். நாம் எதனுடைய ஓர் அங்கமாக இருக்கிறோமோ அந்த இயற்கையைப் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்கிறோம்.
இயற்கையோ மாற்றப்பட முடியாதது. அதனை மனம் அறிந்து மதிக்கும் அளவில்தான் மனதிற்கு உயர்வு கிடைக்கும். நாம் எந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டு வாழ்கிறோமோ அந்த மனித சமுதாயத்தைப் பற்றியும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்கிறோம். மனம், உயிர், மெய்(Truth) என்ற மூன்று மறைபொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
இது போதனை முறை மாத்திரம் அல்ல. இது மனதை பண்படுத்தி பக்குவப்படுத்தும் சாதனை முறை. தனி மனிதன் இந்த ஆன்மீக நெறியில் பண்பாட்டால் அது குடும்ப வாழ்வை வளப்படுத்தும். நல்ல குழந்தைகள் உற்பத்தியாகும். வளரும் சமுதாயம் வளமும் அமைதியும் பெறும். உலகமும் நலமுறும்”.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.











