ஓய்வாக்கே: செப்டம்பர் 3, 1919*
*(ஸ்ரீ அரவிந்தரால் மொழிபெயர்க்கப்பட்டது அல்லது அவரது வழிகாட்டுதலின்படி திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது.)
நான் அவ்வளவு அன்புடனும், அக்கரையுடனும் தயாரித்த உணவை அந்த மனிதன் மறுத்துவிட்டபடியால், நான் அதை எடுத்துக்கொள்ளும்படி கடவுளை வேண்டினேன்.
என் ஆணடவனே, என் அழைப்பை ஏற்று என்னுடன் உணவுண்ண வந்திருக்கிறாய்; எனது எளிய நிவேதனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக எனக்கு இறுதி முக்தி நிலையை அருளியுள்ளாய்.
இன்று காலையில்கூட வேதனையினாலும் கவலையினாலும் மிகவும் பாரமாக இருந்த என் இதயமும், பொறுப்பால் மிதமிஞ்சிய சுமையேறிப் போயிருந்த என் தலையும், இப்பொழுது பாரம் நீங்கிப் போயின.
என்னுடைய உள் ஜீவன் நீண்ட நாட்க ளாகவே இருப்பதுபோல இப்பொழுது அவையும் பிரகாசமாயும் களி ததும்பிக்கொண்டும் இருக்கின்றன. முன் என் அந்தராத்மா நின்னைக் கண்டு புன்முறுவல் செய்ததுபோல இப்பொழுது என் உடலும் செய்கிறது.
என் ஆண்டவனே, இனிமேல் நிச்சயமாக இந்த மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ளமாட்டாய்! ஏனெனில் இந்தத் தடவை நான் போதுமான பாடம் படித்துவிட்டேன், ஒன்றன்பின் ஒன்றாய் வந்த பல பொய்த்தோற்ற ஏமாற்றங்களின் கல்வாரியில் வெகு உயரத் திற்கு, உயிர்த்தெழுதலுக்குத் தகுதி பெறும் அளவிற்கு ஏறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
பழையவை எல்லாம் போய் விட்டன, சக்தி வாய்ந்த அன்பு ஒன்றே மிஞ்சியிருக்கிறது; அது எனக்கு ஒரு குழந்தையின் தூய இதயத்தையும் என் சிந்தனைக்கு ஒரு தேவனின் பெருந்தன்மையையும் சுதந்திரத்தையும் தந்துள்ளது.
ஸ்ரீ அன்னை











