இந்த படத்தில் இருக்கும் மோதிரம் பவித்ரம் மோதிரம் என்று அழைக்கப் படுகிறது.
பவித்ரம் மோதிரம் என்பது பாரம்பரியமாக மதச் சடங்குகளின் போது, குறிப்பாக முன்னோரை நினைத்து அணியப்படும் ஒரு புனிதமான பொருளாகும்.
சாதாரணமாக முன்னோர் நினைவாக சடங்குகள் செய்யும் போது தர்ப்பை புல்லை வலது கை மோதிர விரலில் மாட்டிக் கொள்வார்கள். சடங்குகள் செய்யும் போது கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இது அணியப்பட்டது. காலப் போக்கில் பெரியவர்கள் எப்போதுமே அணியக்கூடியவகையில் பவித்ரம் மோதிரமாக மாறிவிட்டது.
பெற்றோரை இழந்துவிட்ட அந்தணர்களுக்கு, மனைவி குடும்பத்தார் இந்த பவித்திரம் மோதிரத்தை கணவனுக்கு தங்கத்தில் செய்து கொடுப்பார்கள் என்று நண்பர்கள் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். தந்தை உயிருடன் இருந்தால் புதல்வர்கள் இந்த வகை மோதிரத்தை அணியக் கூடாது என்பார்கள்.
திருநெல்வேலியில் ஒரு சில சமூகத்தினர் அறுபது வயதைக் கடந்தவுடன் இதை அணியத் தொடங்குவார்கள்.
இந்த மோதிரத்தைச் செய்யும்போது கைவினைஞர்கள், மிகவும் ஆசாரமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்து உருவாக்குவார்களாம். இப்போதைய நிலைமை தெரியவில்லை.
வலது கை மோதிர விரலில் தான் இதை அணிய வேண்டுமாம். இந்த வகை மோதிரத்தை பவித்ரம் என்று சொல்வதால் இதை அணிபவர்கள் உடல் தூய்மை மற்றும் மனத் தூய்மையுடன் இருக்க வேண்டுமாம்.
இதை அணிவது மன அமைதி, தெளிவு மற்றும் உடல் நலத்தைத் தரும் என்று இதை அணிபவர்கள் நம்புகிறார்கள்.
நான் இந்த மோதிரத்தை எனது மணிவிழாவிற்குப் பிறகு வேறு மோதிரங்களுக்கு மாற்றாக அவ்வப்போது அணிந்து வருகிறேன்.
இந்த மோதிரம் அணிந்திருப்பவர் 60+ என்று எங்க ஊர் காரர்கள் கணித்து விடுவார்கள்.
பவித்ரம் மோதிரம் என்பது இந்து சமயச் சடங்குகளில், குறிப்பாகப் பித்ருக்கள் (மூதாதையர்கள்) வழிபாடு மற்றும் கர்மாக்களின் போது அணியப்படும் ஒரு புனிதமான மோதிரமாகும். இது தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோகத்தால் செய்யப்படுகிறது, மேலும் மூதாதையர்களின் ஆசிர்வாதம் மற்றும் ஆன்மீக ஆற்றலைப் பெறுவதற்காக, வலது கை மோதிர விரலில் அணியப்படுகிறது.
பவித்ரம் மோதிரத்தின் முக்கிய அம்சங்கள்:
பயன்பாடு: தகப்பனார் காலமான பிறகு, பித்ரு பலி சடங்குகள் மற்றும் மூதாதையர் பிரார்த்தனைகளின்போது, இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
வடிவமைப்பு: இந்த மோதிரம் பொதுவாக பிரம்மா முடிச்சு (Brahma mudichu) வடிவில், ஒரு புனிதமான நூல் போன்ற வடிவமைப்பில் இருக்கும்.
பொருள்: பவித்ரம் பெரும்பாலும் தங்கத்திலும், தர்ஜனீ வெள்ளியிலும் செய்யப்படுகிறது. பையனூர் பவித்ரா மோதிரம் (Payyannur Pavithra Ring) மிகவும் பிரபலம்.
விதிமுறைகள்: தகப்பனார் உயிருடன் இருக்கும்போது, பொதுவாக இந்த மோதிரத்தை அணியும் வழக்கம் கிடையாது.










