கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத,
இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து,
உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே!
இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்பதை நாங்கள் அறியோம் எழுந்துவா… பரந்தாமனை பாடித்துதிப்போம் என்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.











