நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.
சொர்க்கம் என்பதற்குப் பொருள் நல்ல சுற்றம். அதாவது நல்லவர்களே நம்மைச் சுற்றியிருக்கும் நிலை. அது இறப்புக்குப் பின் கிடைக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று அறியமாட்டார்கள். நான் செய்யும் நோன்புகளின் பலன் இன்பம். நோன்புகள் மட்டுமல்ல நாம் செய்யும் சேவைகளின் பலனும் இன்பம். அந்த இன்பநிலையை எய்தினால் நாம் இருக்கும் இடமே சுவர்க்கமாகும்.
முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. தீராத சோம்பல் உடையவளே! பொற்கலம் போல் ஒளிர்கின்றவளே! எழுந்து தெளிவுடன் வந்து கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்பாய் எம் பாவையே என்று ஆண்டாள் அழைக்கிறாள்.











