அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அஷ்டமா சித்திகளைச் சித்தர்கள் அஷ்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர். அத்தகைய சித்திக ளைத் திருமந்திரம் விளக்குகிறது.
தானே அணுவும் சகத்துத் தன் நொய்ம்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே
– தி.ம- 649
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மகிமா என்னும் சித்தாகும்.
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது இலகிமா ஆகும்.
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம் வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளி்த்ததாக
வரும் சித்தி பிராத்தி.
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல். அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்
வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்தி லிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.
அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே.
– தி.ம- 469
உடலில் பொருந்திய பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்ற ஆறு துன்பங்களையும் அறியாது உள்ளீர். அங்கு மனத்துள் பெருகிக் கொண்டிருக்கும் தாமச, ராசத சாத்துவிகமாகிய குணங்களினின்றும் பிரியாது உள்ளீர். சித்திகள் வீடுபேற்றைத் தராது என்பதால் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய எட்டு சித்திகள் அமைவதைப் பொருந்தாதீர். பத்து திங்களில் ஆகியது இப்பிண்டம் என்பதை உணர்வீர்.











