கல்யாண தோஷங்கள் நீக்கும் முருகன் திருக்கல்யாண வைபவம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நம் தாய்-தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாகவும் தந்தையாகவும் விளங்கக்கூடிய தெய்வங் களுக்குத் திருமணம் நடத்தி வைத்துப் பார்ப்பது நெஞ்சுக்கு இனிமையான வைபவமாகப் போற்றப்படுகிறது.
🌹
இல்லறத்தில் ஏற்படும் பல்வேறு குறைகளைக் களைந்து கொள்ளவும், இல்லறத்தின் பெருமையை எல்லோரும் புரிந்து கொள்ளவுமே இதுபோன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் முதலான விழாவைபவங்களின் போது எண்ணற்றக் கோயில்களில் தெய்வத் திருமணங்கள் நடந்தேறும்.
🌹
திருப்பதி முதலான சிற்சில தலங்களின் வேண்டுதலின் பொருட்டும் கல்யாண உற்சவம் செய்து வைப்பார்கள். இந்த வைபவத்தில் கலந்துகொள்வதாலும், சங்கல்பித்து வேண்டிக்கொள்வதாலும் தோஷங்கள் நீங்கி கல்யாணம் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள்.
🌹
அதுமட்டுமா? தெய்வத் திருமணங்களை நடத்தி வைப்பதால், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் முதலான கல்யாணத்துக்குத் தடை ஏற்படுத்தும் தோஷங்களின் பாதிப்புகள் விலகும்; மனத்துக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும்; இல்லறத்தில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மனப் பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியரும் பிணக்குகள் நீங்கி ஒன்று சேர்வார்கள், இல்லத்தில் மங்கல காரியங்கள் சுபிட்சமாக நடந்தேறும் என்பது நம்பிக்கை.











